உலகின் பழம்பெரும் மொழிகளுள் ஒன்றான தமிழ் மொழியும், நவீன சக்தியான கணினியியலும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு காலகட்டத்திலும் இதன் சிறப்பியல்பு வளர்ந்து வருவதன் பின்னணியில் இருப்பது தமிழ் இணைய மாநாடு தான். தமிழுடன் கணினித்துவத்தை ஒத்திசைப்பதை மேலும் சிறப்படையச் செய்ய, ஜூன் 24, 2010 அன்று கோவையில் நடத்தப்பட்ட உலகச் செம்மொழித் தமிழ் மாநாட்டின் ஒரு பகுதியாக ஒன்பதாவது தமிழ் இணைய மாநாட்டு நடைபெற்றது.
நான்கு முக்கிய அம்சங்களை மையமாகக் கொண்டு இந்த 9வது தமிழ் இணைய மாநாடு நடைபெற்றது.
• தரவுத்தளம், பொழிபெயர்ப்பு மென்பொருள், குறியாக்கம் (coding), ஆப்டிகல் முறையில் எழுத்துரு கண்டறிதல் போன்று, தமிழ் இணையப் பயன்பாடுகளில் தரநிலைகளையும் ஒழுங்குமுறைகளையும் உருவாக்க வேண்டியதன் அவசியம் முதல் தலைப்பாகக் கலந்துரையாடப்பட்டது.
• நிகழ்ச்சி நிரலின் இரண்டாவது தலைப்பாக மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு கணினிகளில் தமிழைப் பயன்படுத்துவதற்கான கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களை வழங்குவது குறித்து கலந்துரையாடப்பட்டது.
• இந்த முன்னேற்ற அம்சங்களின் வளர்ச்சிப் பணிகளை கண்காணித்து பின்தொடர்வதை தனிநபர் ஒருவரால் செய்ய முடியாது என்பதால் அதற்கான கட்டமைப்பு அல்லது செயல்திட்டத்தை உருவாக்க வேண்டிய நிலை குறித்து மூன்றாவது பகுதி அமைந்தது.
• மாநாட்டு நிகழ்ச்சிப் பகுதியின் இறுதித் தலைப்பாக, தமிழ் நிபுணர்களுக்கும் கணினிப் பொறியாளர்களுக்கும் நிலையான உறவுப்பாலம் அமைப்பது குறித்து பேசப்பட்டது.
தமிழ் கணினியியலில் உள்ள முறையின்மையின் பரிமாணங்களைக் கண்டறிவதற்கான முதல் முயற்சி 1997ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற மாநாட்டில் மேற்கொள்ளப்பட்டது. இரண்டாவது தமிழ் இணைய மாநாடு பிப்ரவரி 1999 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் உருவானது.
தமிழ் கணினியியல் மற்றும் இணையப் பயன்பாடுகளில் நிகழ்ந்து வரும் அபார வளர்ச்சிகளை சர்வதேச தரத்துக்கு எடுத்துச் செல்லும் முயற்சியாக, உத்தமம் என்றழைக்கப்படும் உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் (INFITT) உருவாக்கப்பட்டது.
1999 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற மாநாட்டுக்குப் பின், ஆறு தமிழ் இணைய மாநாடுகள் உலகின் வெவ்வேறு நாடுகளில் நடத்தப்பட்டன. சிங்கப்பூர் (2000), மலேசியா (2001), அமெரிக்கா (2002), சென்னை (2003) சிங்கப்பூர் (2004) மற்றும் ஜெர்மனி (2009) என மாநாட்டு இடங்கள் அமைக்கப்பட்டன.
சமீபத்திய மாநாட்டில், தமிழ் கணினியியலின் நவீன முன்னேற்றங்கள் அடங்கிய பலவகையான தலைப்புகள் கொண்ட 150 ஆராய்ச்சிக் கட்டுரைகளை கிட்டத்தட்ட 400 சர்வதேச நிபுணர்கள் வெளியிட்டனர்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் வேர்ல்டு ரெடினஸ் டீமின் திட்ட மேலாளரான மைக்கேல் கப்லான் அவர்களும், பெங்களுருவில் உள்ள மைக்ரோசாஃப்ட் ரிசர்ச் இந்தியாவைச் சேர்ந்த குமரன் அவர்களும் மிக முக்கியமான சில ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டனர்.
இணையத்தில் தமிழ், தமிழ் மொபைல் கணினியியல், பொழிபெயர்ப்புச் சேவை நிரல்கள் மற்றும் பல புத்தம்புதிய மென்பொருள் வெளியீடுகள் கொண்ட 126 காட்சியகங்கள் அமைக்கப்பட்டிருந்தன. பார்வையிட வந்த பொதுமக்களில் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பயனளிக்கும் தகவல்சுரங்கமாய் காட்சியகங்கள் விளங்கின. தமிழ் இணைய மாநாட்டு மலரில் 130 ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியிடப்பட்டன.
எழுத்துரைகளை குரல்வடிவமாக்கல் (Text to Speech), எழுத்துருக்களின் தொடரியல் பகுத்தறிதல் (Syntactic Parsing), எழுத்துரு உணர்தல் (Character Recognition), எழுத்துப்பிழை சரிபார்த்தல் (Spell Check) போன்ற பல வளர்ச்சிப் பணிகளை மையமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் இயல்பான மொழிச் செயலாக்கம் (Natural Language Processing) குறித்த கட்டுரைகளும் வெளியிடப்பட்டன. பல கட்டுரைகள் இருமொழி தரவுத்தளங்கள், மின் தமிழ் நூலகங்கள், மொபைல் சாதனங்களில் தமிழ், தமிழ் தேடல் பொறிகள், மற்றும் தமிழில் பெரிய தரவுத்தளங்களை செயல்படுத்தல் போன்ற தலைப்புகளைப் பற்றி விளக்குவதாக அமைந்தன.
கணினி-உதவியுடன் தமிழ் கற்பித்தல், தமிழ் வலைப்பதிவுகள் மற்றும் விக்கிப்பீடியாவில் தமிழ் உள்ளடக்க வளர்ச்சி போன்ற செயல்முறைகளை விளக்கும் கட்டுரைகளும் இடம்பெற்றிருந்தன. கணினித்துவ மொழியியல், இருபது லட்சம் வாக்கியங்கள் கொண்ட இருமொழி தொகுப்பகச் சேகரிப்பு போன்ற பகுதிகளில் வரும் ஆண்டுகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்ற முயற்சித் திட்டங்கள் பற்றியும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.
தமிழ் கணினியியலில் இளைய தலைமுறையின் ஆர்வத்தை அதிகப்படுத்துவதே இந்த தமிழ் இணைய மாநாட்டின் அடிப்படை நோக்கங்களில் ஒன்றாக அமைந்தது. தமிழ் கணினியியல் போட்டி மற்றும் விக்கிப்பீடியா போன்றவற்றுக்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே உற்சாகமான பங்களிப்பு காணப்பட்டது.
தமிழ் கணினியியலில் குழந்தைகளின் ஆர்வத்தை வளர்ப்பதன் முயற்சியாக, தமிழ் இணைய மாநாட்டின் ஒரு பகுதியாக தமிழ் உள்ளடக்க உருவாக்கப் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் சுமார் 8000 பள்ளி மாணவர்களும் 3800 கல்லூரி மாணவர்களும் பங்கேற்றனர். மாநில அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்.