|
|
|
|
|
|
|
|
செய்திகள்
|
புத்தகப் பிரியர்களுக்கானத் திருவிழா |
கடந்த 30 வருடங்களாக புத்தக வாசிப்பாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள "புத்தகக் காட்சி", இந்த வருடம் மேலும் மெருகுடன், புதிய, விரிவான இடத்தில், அதிக எண்ணிக்கையிலான ஸ்டால்களுடன் செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் ஜனவரி 10-ம் தேதி அன்று தமிழக முதல்வர் கலைஞர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு ஜனவரி 22-ம் தேதி வரை நடைப் பெற்றது. தொடக்க விழாவின் போதே முதல்வர் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்திற்கு(பாபாஸி) ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக அளித்ததும், புத்தகக் காட்சிக்கான நிரந்தர இடம் குறித்து பேசியதும் பெருமைக்குரியது. முதல்வர் கலைஞரின் படைப்புகள் “கலைஞர் அறிவு கூடம்“ எனும் அரங்கில் சிறப்பாக வைக்கப்பட்டிருந்தது.
இந்த ஆண்டு வழக்கமான அளவை விட மும்மடங்கு அதிகப் பரப்பளவில் புத்தகக் காட்சி அமைந்திருந்தது. மேலும் அரங்குகளின் எண்ணிக்கையும் சென்ற ஆண்டை விட அதிகம். புத்தகக் காட்சியில் தமிழகத்தின் எல்லா பதிப்பாளர்களும் தங்கள் அரங்குகளை அமைத்திருந்தனர். பெரும்பாலான அரங்குகள் தமிழ் புத்தங்களை கொண்டிருந்தது தமிழ் இலக்கிய உலகிற்கு நம்பிக்கை அளிக்கும் ஒன்று ஆகும். “விகடன், கிழக்கு, காலச்சுவடு“ போன்ற முன்னணி பதிப்பாளர்களின் அரங்குகளில் கூட்டம் எப்போதும் நிரம்பியிருந்தது. இவை தவிர பல பதிப்பாளர்கள், எழுத்தாளர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து, அரங்கிற்கு வரும் வாசகர்களை மகிழ்ச்சிக் கொள்ள செய்தனர். பொதுவாக தமிழ் எழுத்தியலில் தேடப்படும் எல்லாப் புத்தகங்களும் கிடைத்தன.
புத்தகங்கள் மட்டுமில்லாமல், தமிழ்மொழிக் கணினி சார்ந்த சிடிக்கள், சிறார்களுக்கான விளையாட்டு, சுயகற்றல் முறையில் அமைந்த சிடிக்கள், தமிழிலேயே உள்ள தகவல் தொழில் நுட்ப நூல்கள் ஆகியவையும் விற்கப்பட்டன. இவ்வகையான தமிழ் தகவல் நுட்ப நூல்கள் அதிக அளவில் இவ்வாண்டு விற்பனை செய்யப்பட்டது சிறப்பான ஒன்று. மேலும் இவ்வகை நூல்கள் ஆர்வமாக படிக்கப்படுவது தகவல் தொழில் நுட்பத் துறையில் தமிழ் மொழிக்கு உள்ள எதிர்காலத்தை வெளிப்படுத்துகிறது.
இவை தவிர வாசகர்களுக்கான கவியரங்கம், கருத்தரங்கம் முதலானவையும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பல திறனறி போட்டிகளும் தொடர்ந்து எல்லா நாட்களும் நடைப்பெற்றன. 12-ம் தேதி முதல் குறும்படங்களும் திரையிடப்பட்டது. மேலும் குழந்தைகளின் அறிவியல் திறனை மேம்படுத்த, பெரியார் அறிவியல் மையம் மற்றும் ஆனந்த விகடன் இணைந்து நடத்திய “அறிவியல் அரங்கம்“ அமைக்கப்பட்டிருந்தது குழந்தைகளை கொண்டாட வைத்தது. சுற்றிக் களைத்துப் போனவர்கள் உண்டு களைப்பாற உணவு விடுதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தினம் தினம் புதிய புத்தக வெளியீடு, கலை நிகழ்ச்சிகள், எழுத்தாளர் களுடனான கலந்துரையாடல்கள், பரிசுப் போட்டிகள், ஏராளமான அரங்குகள், ஏராளமான புத்தகங்கள் என பல சிறப்புகளுடன் நடைப்பெற்ற சென்னைப் புத்தகக் காட்சியை “புத்தகப் பிரியர்களுக்கானத் திருவிழா“ என்று கூறுவதில் தவறேதுமில்லை. | |
|
|
|
|
|
|
Search glossaries
Search our terminology database and product glossaries
»
|
|
|
|
|
|
|
|