Go Search

இணையம் மற்றும் கணினி உலகில் போற்றத்தக்க அறிஞராக திரு.நா. கணேசன் வளர்ந்து வருகிறார். அமெரிக்காவில் வாழ்ந்து  நா. கணேசனின் பேட்டியை பாஷா இந்தியா வாசகர்களுக்காக தொகுத்துள்ளோம்,

 

 


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

1) தங்களுடைய கல்வி மற்றும் தற்போதைய பணி குறித்து விளக்குக.

 

கிண்டி பொறியியற் கல்லூரியில் B.E. (Hons) 1981-ல் எந்திரவியல் கற்று, இந்திய விஞ்ஞானக் கழகத்தில் (IISc)  முதுகலைப் பட்டம் பெற்றேன். அமெரிக்காவில் பென்சில்வேனியா மாகாணப் பல்கலைக் கழகத்தில் எந்திரவியலில் முனைவர் ஆய்வேடு எழுதினேன். அமெரிக்க ஜனாதிபதி ட்ருமன் விண்ணாராய்ச்சி நிறுவனத்திலும் பயிற்சி பெற்றேன்.முனைவர் பட்டத்திற்காக அடுக்குநிலை ஃபைனைட் எலிமெண்ட்ஸ் பற்றிய ஆய்வுகள் புகழ்பெற்ற American Institute of Aeronautics & Astronautics, Journal of Sound and Vibration போன்றவற்றில் வெளியாயின. எனக்கு விண்ணாராய்ச்சி கற்பித்த பேராசிரியர்கள் பலர் ஜெர்மானியர். ராக்கெட் விஞ்ஞானத்தின் தந்தை என்று புகழப்படும் வெர்னர் வான் ப்ரானின் குழுவில் பணியாற்றிய பெர்னார்ட் கதர்ட், பின்னர் பேரா.ரெமி ஏங்கல்ஸ்.1989-ஆம் ஆண்டு ஹ்யூஸ்டன் மாநகரில் ஜான்சன் விண்ணாராய்ச்சி நிலையத்தில் பணிக்குச் சேரும் வாய்ப்பமைந்தது.இருபது ஸ்பேஸ் ஷட்டில் (Space Shuttle)  விண்பயணங்களுக்கு விசை மற்றும் இயங்கியல் (Loads and Dynamics) நிபுணராகப் பணியாற்றினேன். அமெரிக்க ஷட்டில் விண்பயணங்களால் தான் இன்று எட்டு அல்லது பத்து விண்வெளி வீரர்கள் வருடக் கணக்கில் ஸ்பேஸ் ஸ்டேஷனில் தங்கியிருந்து மனிதன் விண்வெளியில் வாழ்தற்கான சாத்தியக் கூறுகளையும், உலகில் தட்பவெப்ப நிலை மாறுதல்களையும், மருந்துகள் தயாரிப்பிலும், தொலைதொடர்பு ஆய்வுகளையும் முன்னெடுக்கிறது. கருங்குழி (Black holes) தேற்றம் கண்ட நோபல் விஞ்ஞானி எஸ். சந்திரசேகர் எக்ஸ்ரே லேப் வானில் செலுத்துவதற்கு நடந்த பரிசோதனைகளிலும், சந்திரயான் விஞ்ஞானி ம. அண்ணாதுரைக்கு லிண்டன் ஜான்சன் விண்மையம் அளித்த கருவிகளுக்கும், வரவேற்புக்கும் பங்குகொண்டது வாழ்வில் மறக்கொணாதது. முனைவர் அண்ணாதுரையின் ‘கையருகே நிலா’ நூலில் காணலாம்.

 

2) அமெரிக்க பல்கலைக்கழகங்களில் உள்ள தமிழ்த்துறை மற்றும் நூலகங்கள் பற்று கூற முடியுமா?

 

அமெரிக்காவில் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை பெரிதும் வளர்ச்சி அடைந்ததாகச் சொல்ல இயலாது.விரிவுரையாளர் பதவி தான் தமிழுக்கு 4 அல்லது 5 இடங்களில் உள்ளது.ஆனால், சமய ஆராய்ச்சித்துறை, ஆசிய கண்ட ஆய்வுத்துறைகளில் சில தமிழர்கள் தமிழாய்வுகளை நடத்தி வருகின்றனர்.தமிழ்ப் பேராசிரியர்களாக விளங்கிய ஷிப்மன், ஹார்ட் போன்றோர்  பணி ஓய்விலிருந்து இளைப்பாறி வருகின்றனர். திராவிட வேர்ச்சொல் அகராதி தந்த பேரா.எமனோ, இந்தியச் செவ்வியல் இலக்கியங்கள் மொழிபெயர்ப்பில் புதுப்பாட்டை போட்ட ஏ. கே.ராமானுஜன், நார்மன் கட்லர் போன்றோர் மறைந்துவிட்டனர்.இராமானுஜனுக்கு முன் சமஸ்கிருத மொழிபெயர்ப்புகள் 150 ஆண்டுகளாய் இருப்பினும் அவை படிக்க இயலா நடையில் இருந்தன.சீன இலக்கியத்துக்கு எஸ்ரா பௌண்ட் வந்துதான் அழகான மொழிபெயர்ப்பு கிடைத்தது.இந்திய மொழிகளுக்கு ஏ. கே.ராமானுஜன் மொழிபெயர்ப்புதான் அந்தச் சிறப்பை அடைந்தது.ஆனால் இன்றோ பல பல்கலைக்கழகங்களுக்கும் அமெரிக்க பொருளாதார நிலையால் அரசாங்க நிதிநல்கை குறைவடைகிறது.அதை ஈடுகட்ட தமிழர்கள் நிதிதிரட்டி அளித்து பேராசிரியர் பீடங்களை அமைக்கலாம்.பொதுச் சட்டம் 480 என்பதன் மூலம் ஏராளமான தமிழ்ப் புத்தகங்களை அமெரிக்கா தன் தூதரகத்தில் அமைந்த தனி அலுவலகம் மூலமாக 1960களில் இருந்து வாங்குகிறது.அவை அமெரிக்கா முழுவதும் சுமார் பத்து நூலகக் கிடங்குகளில் சேமிக்கப்படுகின்றன. தமிழ் இளைஞர் சமுதாயம் எண்ணிக்கையில் நல்ல வளர்ச்சி கண்டாலும், அமெரிக்காவின் நூலகங்களில் உள்ள தமிழ் நூல்களைப் பயன்படுத்துவோர் தொகை குறைவு என்றுதான் சொல்லவேண்டும்.

 

3) அமெரிக்காவில் ஆங்கிலத்திற்கு அடுத்து கையாளப்படும் பிற பழமையான அமெரிக்க மொழிகள் என்னென்ன?விளக்குக.

 

அமெரிக்க இந்தியர்கள்தான் பழமையான மொழிகளைச் சிறு எண்ணிக்கையில் புழங்குகிறார்கள். நியூ மெக்சிகோவில் ஃஜூனி, ஓக்லஹோமாவில் செரொக்கீ, மேற்கே சியூ, நியூ யார்க்கில் இராகுவாயி, … ஆனால் இவை எழுத்தில்லா மொழிகள். தற்காலத்தில் ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு எழுதுவதும், வாய்மொழி இலக்கியங்களைப் பதிவு செய்தலுக்குமாக முயற்சிகள் பல் நடக்கின்றன.ஆங்கிலத்துக்கு அடுத்த படியாக, மெக்சிகர், தென்னமெரிக்க நாட்டு மக்கள் குடியேறுவதால் டெக்சாஸ், அரிசோனா, கலிபோர்னியா மாநிலங்களில் ஸ்பானிஷ் மொழி பெருவளர்ச்சி அடைந்து வருகிறது. ஸ்பானிஷ் மொழியைப் பள்ளிகளில் கற்பிக்க ஆரம்பித்துள்ளனர்.

 

4) தங்களுடைய தமிழ்ப் பணி மற்றும் தங்களின் தமிழ் வளர்ச்சி குறித்த எதிர்கால நோக்கங்கள் என்ன?

 

முக்கியமாகச் சொல்வதானால், (1) 1947-க்கு முன் அச்சான சுமார் ஒரு லட்சம் நூல்களுக்கான பட்டியல் தயாரித்தது (2) இந்தியச் செம்மொழி இலக்கியங்களின் ஒரே நூலான காராணை விழுப்பரையன் வளமடலை இணையத்தில் 10 ஆண்டுகளுக்கு முன் வழங்கியது. காராணை விழுப்பரையன் ஆதிநாதன் முதற் குலோத்துங்கனின் சேனாபதி. நூலாசிரியர் செயங்கொண்டார் தன் பிற்காலத்தில் கலிங்கத்துப் பரணி பாடியவர் (3) தமிழுக்கு ௐ உள்ளிட்ட சில எழுத்துக்களை யூனிகோட் நிறுவனம் வாயிலாக அளித்தது இவற்றைச் சொல்லலாம். இனிவரும் காலங்களில் சிந்து சமவெளி – தொல்தமிழ் தொடர்புகள் பற்றிய ஆய்வுகளையும், படிக்காசுப் புலவர் பாடிய மோரூர் வருக்கக்கோவை, கம்பனை அடியொற்றிப் பிறந்த தக்கை இராமாயணம் - இவற்றை அச்சிடக் கவனம் செலுத்த ஆவல் பூண்டுள்ளேன்.

 

5) தமிழுக்காக தமிழக அரசு செய்ய வேண்டியது என்னென்ன?

 

தமிழுக்கு அரசு செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளன.முதலில் தமிழ்நாட்டு அரசாங்கத்தின் இணையதளங்கள் யாவும் தமிழில் வரவேண்டும்.இப்பொழுது ஆங்கிலத்திலே உள்ளன.முனைவர், முதுகலை ஆய்வேடுகளை ரூ.1000-க்காவது விரும்புவோர் விலைகொடுத்து வாங்கிப் படிக்க வசதி செய்துதரவேண்டும்.19-ஆம் நூற்றாண்டு அச்சு நூல்கள் பலவும் கிடைத்தற்கு அரிதாகவும், அப்பளம் போல் நொறுங்குவனவாகவும் உள்ளன.அவற்றை கணினியில் வருடி பிடிஎப் கோப்புகளாக தமிழ்நாட்டுப் பல்கலைத் தளங்களில் தரவேண்டும்.இதுமாதிரி செய்யக் குறைந்தது 100,000 நூல்களாவது உள்ளன.இன்னும் 30 அல்லது 50 ஆண்டுகளில் முற்றாக அவை அழிந்துபடும்.மேலும், தமிழ், வரலாற்று மொழியியல், திராவிட மொழிகளின் ஒப்பீடு இவற்றுக்கு நல்ல ஆய்வேடு உலக தராதரத்துடன் நடத்தி, அதனை இணையவெளியில் பரப்ப வேண்டும். செம்மொழியில் உள்ள கருவூலங்களையும், அதனை ஆராய்ந்து வெளிப்படுத்தும் முனைவர்களின் உழைப்பையும் கண்டு உலகம் போற்றும், பல புதிய மாணவர்கள் உலகெங்கும் இருந்து தமிழ்த்தேன் அருந்த வருவர். பழைய ஆய்விதழ்கள் – தனிநாயக அடிகள் தோற்றுவித்த தமிழ் கல்ச்சர், கரந்ததைத் தமிழ்ப்பொழில், மதுரைத் தமிழ்ச்சங்கத்துச் செந்தமிழ் போன்றனவும், பல்வேறு மறைந்த தமிழ் நூலாசிரியர்களின் கட்டுரைகளும், நூற்படைப்புகளும் நாட்டுடைமையாக்கப் பட்டுள்ளன. யார் வேண்டுமானாலும் அச்சிடலாம்.ஆனால், கிடைப்பதில்லை.எனவே அவை பிடிஎப் கோப்புகளாய், பல்கலைக் கழக தளங்களில் வலையுலா வரவேண்டும்.

 

6) தமிழுக்காக தமிழ்க்கணினி தொழில்நுட்ப வல்லுநர்கள் செய்ய வேண்டியது என்னென்ன?

 

சென்னை கிறிஸ்துவக் கல்லூரி 30 ஆண்டுகளுக்கு முன் ‘கல்வெட்டுக்களில் திருக்குறள்’ என்னும் முக்கியமான நூலை வெளியிட்டது.இரண்டாயிரம் ஆண்டுகளாய் தமிழ் எழுத்துக்களின் வகைகளில் திருக்குறள் அதிகாரங்களை வெளியிட்டுள்ளது.கணினி அறிஞர்கள் அவற்றுக்கு நல்ல எழுத்துருக்கள் செய்து தரவேண்டும்.கல்வெட்டைப் படிக்கும் கல்வியைப் பரப்ப வெகுவாய் உதவும்.கணிஞர்கள் சேர்ந்து ஆலோசனை தந்து, அரசாங்கம் நாட்டுப்புற, நகர்ப்புறப் பள்ளிகளில், பஞ்சாயத்து ஒன்றிய அலுவலகங்கள், கிராம நூலகங்களில் கணினி, இணைய இணைப்புடன் தரவேண்டும்.பள்ளிகளில் வலைப்பதிவு அமைப்பது பற்றி விருப்பப்பாடமாக வைக்க அரசை தமிழ்க்கணி வல்லுநர்கள் தூண்ட வேண்டும்.இணையம், தமிழ் தட்டச்சு, வலைப்பதிவுகள் பற்றிய பயிலரங்குகளை எல்லா ஊர்களிலும் கல்லூரிகள், தமிழ்மன்றங்களுடன் இணைந்து நடத்தலாம்.சிற்றிதழ்களை இணையத்தில் நடத்த சிற்றிதழ் ஆசிரியர்களுக்கு இன்னும் அறிமுகம் இல்லாதுள்ளது.அச்சை விட்டுவிட்டுத் தமிழ் அறிவுஜீவிகளின் உலகம் இணையத்துக்கு வரத் தமிழ்க்கணி வல்லார் பங்கு மிகத் தேவை.பெ.தூரன் தலைமையில் வெளியிட்ட கலைக்களஞ்சியத் தொகுதிகள் எல்லாமும் வெள்ளுரை (plain-text) வடிவில் தமிழ் வளர்ச்சிக் கழக இணையதளத்தில் தர வேண்டுகோள்.

 

7) தங்களிடமுள்ள தமிழ் அரிய நூல்கள் என்னென்ன? சிறப்புகளை கூறவும்.

 

வீரமாமுனிவரின் தமிழ் ஆசிரியரான சுப்பிரதீபக் கவிராயரின் பழனி மதன வித்தார மாலை, தக்கை ராமாயண ஏட்டுச் சுவடிகள் உள்ளன. பெரியபுராண உரையாசிரியர் சிவக்கவிமணியின் தந்தையார் இயற்றிய கிள்ளை விடுதூது, சரவணப்பெருமாள் கவிராயரின் நகைச்சுவைப் பிரபந்தம் ஆகிய விநாயகர் திருமுக விலாசம், … போன்றவை குறிப்பிடத் தகுந்தவை. அச்சாகாத கூனம்பட்டி மாணிக்கவாசகர் ஆதீனப் பிரபந்தங்கள் ஏழும், அண்மையில் கிடைத்த அப்பிரமேயர் ஊடலும் உள்ளன.கடிகைமுத்துப் புலவரின் நூல்கள் போன்ற பல 19-ஆம் நூற்றாண்டு அச்சு நூல்களும் என் நூலகத்தில் உள்ளன.

 

8) தமிழுக்கான செம்மொழி அந்தஸ்தை வளக்க நாம் செய்ய வேண்டியது என்னென்ன?

 

இணையத்தில் தமிழ் செம்மொழி என்று இந்தியவியல் பேராசிரியர்களுடன் 1998-ல் முதலில் கருத்தாடியதற்கு என் பங்கும் உண்டு.திராவிட மொழியியல் பேரா. ப. கிருஷ்ணமூர்த்தி அப்போது அந்த நிபுணர்குழுவில் தமிழ் செம்மொழி அன்று என எடுத்துரைத்தார். ஆனால், கன்னட, தெலுங்கு அறிஞர்களே செம்மொழி வரையறையை 2000 ஆண்டிலிருந்து 1000 ஆண்டாய்க் குறைத்துத் தங்கள் மொழிகளைச் செம்மொழி ஆக்கியது இந்திய அரசியலின் விந்தை.ஆனால், கலிபோர்னியா தமிழ்ப் பேரா. ஜார்ஜ் ஹார்ட் இந்தியாவின் செம்மொழிகள் வடமொழியும், தமிழும் தான் என்ற கொள்கையுடையவர்:   http://nganesan.blogspot.com/2010/09/bhk.html

 

 

தமிழ்ச் சமுதாயம் கிடைத்தற்கரிய செம்மொழி இலக்கியங்களைக் கற்றும், மொழிபெயர்த்தும் உலகம் முழுதும் பரப்ப வேண்டும். நல்ல ஆய்வேடுகளை தமிழ்நாட்டின் அறிவாளர்களும், பல்கலைக்கழகங்களும் நடத்தி திராவிட மொழியியல், இந்தியாவின் பண்டை வரலாற்றில் பழந்தமிழரின் பங்கு இவற்றை மேலும் நிறுவ வேண்டும். இதற்கு ஐராவதம் மகாதேவன், ஆஸ்கோ பார்போலா ஆராய்ச்சிகள் முன்மாதிரிகளாக அமையும். என் பங்குக்கு சிந்து நாகரிகத்தில், அந்தச் செம்பூழிக் காலச் சமயத்தில் முதலை வழிபாடு, விடங்கர் எனப்படும் பெருநதிகளில் வாழும் முதலையுடன் கொற்றவை ஆகிய துர்க்கையின் மணவினைக்கான சிந்து முத்திரை பற்றிய கலைவரலாற்றுக் கட்டுரை 2007-ல் எழுதியுள்ளேன். தமிழ்ப் பல்கலை நிறுவனர் வ. ஐ. சுப்பிரமணியம் ஐயாவின் திருவனந்தபுரம் திராவிடவியல் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட நினைவு மலரில் சிந்து சமவெளியில் மகரம் என்ற சொல்வேராய்வுக் கட்டுரையை வாசிக்கலாம்.இன்னும் பல கல்லூரி இளைஞர்கள் பல்லாண்டு உழைத்தால் திராவிடர்களின் பண்டைப் பங்களிப்பு வெளிச்சத்துக்கு வரும்.

 

9) நாம் தமிழ் கற்பித்தல் முறையில், நவீன உலகில் என்னென்ன மாற்றங்களை கொண்டு வர வேண்டும்?

செவ்வியல் இலக்கியங்களையே பள்ளிச் சிறுவர்களுக்குக் கற்பிக்க வேண்டும் என்பதில்லை.உரைநடைத் தமிழையும் கற்பிக்க வேண்டும். அதுவே நல்லது என்று மொழியியல் அறிஞர்கள் தெய்வசுந்தரம், சுப. திண்ணப்பன் (சிங்கை), இ. அண்ணாமலை (சிக்காகோ), ஷிப்மன், வாசு ரெங்கநாதன் போன்ற பேராசிரியர்கள் அறிவுரையை ஏற்று நடந்தால் உலகெங்கும் பரவி வாழும் தமிழினம் தாய்த்தமிழுடன் தொடர்பு அறாமல் வாழும். உலகத்தை ஒரு கைக் கணினிக்குள் இன்று இணையமும், மொபைல் பேசிகளும் செய்துவிட்டன.அடுத்த தலைமுறைக்குக் கற்பிக்க பேச்சுத் தமிழையும் பாடமாக்க வேண்டும்.பேச்சுத் தமிழை எழுத்தில் காட்டச் சில மீக்குறிகள் தேவைப்படுகின்றன.அவற்றைக் கணிஞர் சமுதாயம் மொழியியலாருடன் இணைந்து யுனிகோடில் தர முயலலாம்.

 

10) தமிழ் எழுத்துருக்கு, எழுத்து சீர்திருத்தம் தேவையா?

 

பல தமிழ்க் குழந்தைகளும், வயதில் பெரியோரும் தமிழே படிக்கத் தெரியாத நிலை நம் வாழ்வில் தற்காலத்தில் யதார்த்தம் என்பதை யாரும் மறுக்கமுடியாது.மலேசிய தமிழ்ப் பள்ளிகளில் ஆண்டுக்காண்டு குழந்தைகள் சேர்வது குறைந்து வருகிறது.தமிழ்நாட்டிலும் வசதி படைத்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி, ஆங்கிலப் பள்ளிகளை நாடுகின்றனர் என்பது கண்கூடு.இந்த நிலையில், பெரியார், உவேசா மாணவர் கிவாஜ, மபொசி, கொடுமுடி சண்முகம், புலவெ செ. இராசு, மணவை முஸ்தபா, ஐராவதம் மகாதேவன் போன்ற முன்னணித் தமிழறிஞர் முன்வைக்கும் உயிர்மெய் பட்டியலின் சீர்மை மிக அவசியமான ஒன்று, தமிழைக் கற்பிக்க எளிய வழி, மாணவரும் வாழ்க்கையில் பல பணிகளில் ஈடுபட்டாலும் தமிழ் எழுத்தை மறக்காதிருக்க உதவும். தமிழ் இணையப் பல்கலை நிறுவனர் வா.செ.குழந்தைசாமி அவர்களின் சீர்மை எழுத்து பெரியார் நிறுவிய விடுதலை இதழில் அச்சாகிறது. இணையத்தில் காந்தளகம் நிறுவனத்தார் நடத்தும் தேவார இணையதளத்திலும், விடுதலை பத்திரிகையிலும் விரும்புவோர் தேர்ந்தெடுத்தால் அத் தளங்களை சீர்மை முறையில் டைனமிக் எழுத்துரு நுட்பத்தால் படிக்க இயலும் வழியில் தர உள்ளோம். மாண்புமிகு எம்ஜிஆர் சீர்மை எழுத்தை நடைமுறைப்படுத்தினார்.ஆனால், அதனை அரைக்கிணறு தாண்டிய நிலை எனலாம்.அழகான ஒரு வடிவில் உ, ஊ உயிர்மெய் எழுத்துக்கள் பிரித்து எழுதப்படல் எதிர்காலத்தில் தமிழை அறிவியல் சிந்தனைக்கு வலுவூட்டும்.பழைய ஓலைச்சுவடிகளுக்குக் கூட்டெழுத்து முறை தேவை இருந்தது.ஆனால் இன்றைய வேகமான உலகுக்குத் தேவையில்லை என்று கேரளாவில் தங்கள் மொழிக்கு நடைமுறை ஆக்கிவிட்டனர்.தமிழ்ச் சமுதாயம் விலங்கு பூட்டிய எழுத்தில் இருந்து விடுதலை எழுத்தாகுமா?என்பது அறிஞரும், அரசாங்கமும் சிந்திக்க வேண்டும். தமிழ் இணையப் பல்கலை தளத்தில் வாசெகு அவர்களின் எழுத்துச் சீர்மைச் சொற்பொழிவு கேட்கவும்:  http://tamilvu.org/esvck/index.htm

 

 

 

This site uses Unicode and Open Type fonts for Indic Languages. Powered by Microsoft SharePoint Server.
©2014 Microsoft Corporation. All rights reserved.