Skip Ribbon Commands
Skip to main content
    

 

 

இராம சுகந்தன் பேட்டி
 

 

 


தமிழ் கணினி துறையில் சமீபகாலமாக தன்னுடைய வளர்ச்சியைக் காட்டி வரும்    ஐ டியூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர். இராம சுகந்தன் அவர்களின் பாஷா இந்தியா இணையத்தளத்துக்கான பிரத்தியேக பேட்டி:


உங்களுடைய குடும்ப பின்னணி மற்றும் கல்வி தகுதி என்ன ?


என்னோட அப்பா காங்கிரஸ்காரர், ஐந்து முறை எம்பியாக இருந்து மறைந்த வாழப்பாடி கூ. ராமமூர்த்தி அவர்கள், அம்மா கலைமணி ஒய்வு பெற்ற ஆசிரியை. என்னோட மனைவி பிரமிளா பல்மருத்துவர். என் தந்தை வாழப்பாடி கூ. ராமமூர்த்தி அவர்கள்  இந்திய அரசின் மத்திய அமைச்சரவையில் சிறப்பாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நான்  பள்ளி படிப்பு சேலத்தில் படித்தேன் அதற்கு பிறகு மேற்படிப்புக்காக ரஷ்யா சென்று இருந்தேன் அங்க சோவியத் யூனியன் பிரச்சனையின் போது படிப்பை தொடர முடியாமல் போனது. பிறகு ஜெனிவா சென்று பிபிஏ மற்றும் எம்பிஏ முடித்தேன்.


படித்து முடித்தவுடன் ஆரம்பகால பணிகள் என்னவெல்லாம் செய்தீர்கள் ?


ஆரம்பத்தில் ரிலையன்ஸ் பெட்ரோல் மார்க்கெட்டிங் டிவிசனில் இரண்டு வருடம் வேலை பார்த்தேன். பிறகு நானே சொந்தமாக பிசினஸ் ஆரம்பித்து விட்டேன்.


சொந்தமாக பிசினஸ் ஆர்வம் எப்படி ஏற்பட்டது ?


கணினி துறையில் எதாவது செய்ய வேண்டும் என்று மனது துடித்துக்கொண்டே இருந்தது. மேலும், என் தமிழ் பற்று நம் தமிழுக்கு எதாவது செய்யனும் என்பதன் அதிகப்படியான ஆசையும் ஆர்வமும் முக்கிய காரணம்.
எதற்காக மற்றவர்களிடம் சென்று வேலை பார்க்க வேண்டும், சொந்தமாக பிசினஸ் ஆரம்பித்தால் நம்மால் பலருக்கு வேலை கொடுக்க முடியும் என்கிற மற்றொரு காரணம் உண்டு.


தமிழுக்காக செய்தது தான் என்ன ?


சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகள் அவர்களின் மொழியினை மற்ற நாடுகளுக்கும், கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கும் கற்று தர முன்வருகிறது. நம் தமிழில் அதற்கான வேலைப்பாடு குறைவு தான் அதனால் தான் நான் தமிழ் கற்பீர் எனும் இ-லேர்னிங் வெளியிட்டேன். அதோடு மட்டும் இல்லாமல் பஞ்சதந்திர கதைகள், நீதிகதைகள் எல்லாம் சிடி அனிமேஷன் முறையில் படமாக்கப்பட்டு வெளியிட்டு இருக்கிறேன்.
என்னுடைய தந்தை மறைவுக்கு பிறகு அறக்கட்டளை ஆரம்பித்து தமிழ் பணியும் சமூகப்பணிகளும் செய்து வருகிறேன்.


தமிழ்க் கணினித் துறையில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி ?


எதிர்காலம் இனி எந்த வேலையும் கம்ப்யூட்டர் இல்லாமல் இருக்காது அதனால் கம்ப்யூட்டரில் தமிழ் வளர்ச்சியை எவ்வாறு நிலைநாட்டுவது எனும் சிந்தனை . தமிழின் மீதான ஆர்வம் அதை எங்கெல்லாம் எடுத்து செல்ல முடியுதோ அங்க எல்லாம் எடுத்துட்டு போவேன்.


உங்கள் நிறுவனத்தின் முக்கிய தகவல் தொழில்நுட்ப பணிகள் என்னென்ன ?


தமிழ் கற்பீர் ( தமிழ் எழுத்துக்கள், திருக்குறள், ஆத்திச்சூடி, எழுத்து பயிற்சி கதை பாட்டு விளையாட்டு)
மழலை பாடல்கள், புதிய நீதி கதைகள் 2 பாகம், பஞ்ச தந்திர கதைகள்
இன்னும் பல படைப்புகள் சிடியாக வெளி வருவதற்கான வேலைகள் நடந்து வருகிறது .
தற்போது பிரபல அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து எங்கள் தயாரிப்புகளை உலகமெங்கும் இருக்கும் தமிழர்கள்  அனைவரும் பயன்பெறும் வகையில் இணையத்தில் தொகுத்துள்ளோம். சில அனிமேசன் பாடல்களை ஐடியூனில் இலவசமாக தந்துள்ளோம்.


கலந்துகொண்ட மாநாடுகள், கருத்தரங்குகள்  என்னென்ன அதன் சிறப்பு அம்சங்கள் பற்றி சொல்லுங்கள் ?


2001 மலேசியா தமிழ் இணைய மாநாட்டில் முதலில் பங்கேற்றேன். அங்கே தான் தமிழ் கற்பீர் அறிமுகப்படுத்தினேன். 3000 சிடி அப்போது விற்று தீர்த்தது. அதற்கு பிறகு தொடர்ந்து நடைபெற்ற அனைத்து தமிழ் இணைய மாநாட்டிலும் பங்கேற்று வருகிறேன். கணித்தமிழ் சங்கத்தில் ஆட்சி மன்ற குழு உறுப்பினராக உள்ளேன்.


தமிழ்கணினி துறையில் உங்க எதிர்கால திட்டம் என்ன ?


எல்லா மொழி மக்களும் தமிழ் கற்க வேண்டும் அதற்கு என்னென்ன செய்ய முடியுமோ அதெல்லாம் செய்வேன் . முழுக்க முழுக்க தமிழில் ஒரு சாப்ட்வேர் உலகமெங்கும் பரவிட செய்யவேண்டும். அது தமிழ் கற்க உதவ வேண்டும். அதற்கான வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது.  ஒன்பது மற்றும் பத்தாவது படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு சமச்சீர் கல்வியின் கணக்கு பாடம் முழுவதும் சிடியாக கொண்டு வருவதற்கான வேலைகள் முழுவதும் முடிந்துவிட்டது. அதன் பிறகு அனைத்து பாடங்களுக்கும் சிடி தயாரிப்புக்கான வேலைகள் நடந்து வருகிறது.


தமிழ்கணினி சிடி இது போக வேற ஏதாவது படைப்புகள் ?


பெருந்தலைவர் காமராஜர் பற்றி ஒரு ஆவணப்படம் தயாரித்து இருக்கிறேன். முழுக்க முழுக்க தமிழகம் எங்கும் இருக்கிற அனைத்து குழந்தைகளும் அய்யா காமராஜரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதன் நோக்கமே. இதற்காக எல்லாம் பெரிதாக எதும் எதிர்பார்க்காமலேயே இலவசமாகவே கொடுத்து இருக்கிறேன்.

 

This site uses Unicode and Open Type fonts for Indic Languages. Powered by Microsoft SharePoint 2013.
©2014 Microsoft Corporation. All rights reserved.