டாக்டர் வா.செ.குழந்தசாமி நேர்காணால்

டாக்டர் வா.செ.குழந்தசாமி, திருச்சி (தற்பொழுது கரூர்) மாவட்டத்தில், வாங்கலாம்பாளயம் என்ற சிற்றூரில் பிறந்தவர் (14.7.1929). இந்தியாவிலும், பின்னர் ஜெர்மனியிலும், அமெரிக்காவிலும் உயர்கல்வி பயின்றவர். நீர்வளத் துறையில் டாக்டர் பட்டம் பெற்றவர்.

நீர்வளத்துறைப் பேராசிரியர்: தமிழகத் தொழில் நுட்பத் கல்வி இயக்குநர்: ஹிழிணிஷிசிளி வல்லுநர் (Expert) போன்ற பொறுப்புகளை வகித்தவர். மதுரை காமராசர் பல்கலைக் கழகம், அண்ணா பல்கலைக்கழகம் சென்னை: இந்திரா காந்தி தேசியத் திறந்த நிலைப் பல்கலக்கழகம், தில்லி என மூன்று பல்கலைக் கழகங்களில் துணை வேந்தராக இருந்த பெருமைக் குரியவர். தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் (Tamil Virtual University) நிறுவனத்தலைவர் (Founder Chairman). தொழில் நுட்பக் கல்வி, உயர் கல்வி, தொலைநிலைக் கல்வி மற்றும் ஆய்வுத்துறைகளில் நீண்ட ஈடுபாடு உடையவர். இலக்கியத்தில், குறிப்பாகத் தமிழில் ஆர்வமும், ஈடுபாடும் உடையவர். `குலோத்துங்கன்` என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதுபவர். இவரது தமிழ்ப் படைப்புகள் ஆறு கவிதைத் தொகுப்புகளாகவும், தமிழில் எட்டு உரைநடை நூல்களாகவும் ஆங்கிலத்தில் மூன்று உரைநடை நூல்களாகவும் ஒரு கவிதை நூலாகவும் வெளிவந்துள்ளன. இவருடைய கவிதைகள் அனைத்தையும் கொண்ட தொகுப்பு ஒன்று. 'குலோத்துங்கன் கவிதைகள்' என்ற தலைப்பில் 704 பக்கங்களில் 2002-இல் வெளிவந்துள்ளன.

இன்றைய தேவைக்கேற்பத் தமிழ் மொழியில் பல துறை இலக்கியங்களை, குறிப்பாக அறிவியல் தொழில்நுட்ப இலக்கியங்களை உருவாக்குவது, தமிழ் மொழிக்குப் புதுமை ஆக்கம் தேடுதல் (Modernisation) தமிழ் மொழி கற்பதை எளிதாக்குதல் ஆகியன இவர் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ள துறைகளாகும். கலைச் சொல்லாக்கம் பற்றியும், புதிய சொற்கள் உருவாக்குவதற்கான உத்திகள் பற்றியும், பல கருத்துகளை நூல் வடிவிலும், கட்டுரை வடிவிலும் வெளியிட்டுள்ளார். இவர் எழுதிய நூல்கள் பல பல்கலக்கழகங்களில் பாட நூல்களாகவும், இவரது கட்டுரைகள், கவிதைகள் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி, பல்கலைக் கழக வகுப்புகளில் பாடமாகவும் இடம் பெற்றுள்ளன. `வாழும் வள்ளுவம்` என்ற தலைப்பில் வெளிவந்த இவருடய நூலுக்கு 1988-இல் தேசிய அங்கீகாரமான சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது. அறிவியலுக்கும், கல்விக்கும் இவர் ஆற்றிய தொண்டைப் பாராட்டி, குடியரசுத் தலைவர் 1992-இல் இவருக்கு, தேசிய கௌரவமான `பத்மஸ்ரீ` விருதும் அறிவியல் - தொழில் நுட்பம் ஆகிய இரண்டு துறைகளிலும் இவர் செய்த சேவை படைத்த சாதனைகளுக்காக 2002-இல் தேசிய கௌரவமான `பத்ம பூஷண்` விருதும் அளித்துச் சிறப்பித்தார். அவரது மதிப்பு வாய்ந்த கருத்துகளையும், அனுபவங்களையும் பாஷாஇந்தியா இணையத்தளத்துடன் பகிர்ந்து கொண்டார். அவற்றிலிருந்து....
செவ்வியல் மொழிகள் என்பதற்கான வரையறைகள் என்னென்ன? மற்றும் செவ்வியல் மொழி சார்ந்த மற்ற தகவல்கள் இவற்றை கூறுங்கள்...
'செவ்வியல் மொழி' என்ற சொல் 'கிளாசிகல் லாங்குவேஜ்' என்ற கருத்தின் தமிழ் மொழி சமனி ஆகும்.

'கிளாசிக்கல்' என்பது இலத்தீன் சொல்லான 'கிளாசிகஸ்' என்பதலிருந்து உருவாக்கப்பட்டது. இலத்தீனிலிருந்து முதலில் பிரெஞ்சு மொழிக்கும் பின் ஆங்கில மொழிக்கும் கொண்டு செல்லப்பட்டது.

இலக்கியங்களில், 'கிளாசிஸம்' என்ற சொல்லானது காரணம், தெளிவு, ஒழுங்கு, கட்டுபாடு மற்றும் நாகிரீகமான தோற்றம் போன்றவற்றை கொண்டுள்ள தகவல்களை குறித்தது. ஹோமர், பிளட்டோ மற்றும் அரிஸ்டாடில் போன்றோரின் நூல்கள் இவ்வகை மரபு சார்ந்த நூல்களாக கருதப்படுகின்றன.

செவ்வியல் (ஆங்கிலத்தில் 'கிளாசிகல்') என்ற சொல் இலக்கியம், சிற்பம் மற்றும் ஒவியம் போன்றவற்றின் பல கூறுகளை விளக்கப் பயன்படுகிறது. நமது விடயத்தில் செவ்வியல் இலக்கியம் என்பதை மட்டும் கருத்தில் கொள்கிறோம்.

தொடக்க காலத்தில் ஐரோப்பியர்கள் பழமை வாய்ந்த இலத்தீன் மற்றும் கிரேக்க இலக்கியங்களைத்தான் செவ்வியல் இலக்கியங்கள் என்று கருதினர். அதனால் அவ்விரு மொழிகளும் இயல்பாகவே செவ்வியல் மொழிகள் என்று கருதப்பட்டன. இதிலிருந்து பழமை வாய்ந்த இலக்கியங்களை கொண்ட மொழிகள்தான் செவ்வியல் மொழி என்ற தகுதியை அடைய முடியும் என்று நாம் உணரலாம்.

எவ்வாறு கிரேக்க மற்றும் இலத்தீன் மொழிகள் செவ்வியல் மொழிகள் என்ற தகுதியை பெற்றனவோ அவ்வாறே தமிழ் மொழியும் அதன் பழமை வாய்ந்த 'சங்க இலக்கியங்கள்' மூலம் செவ்வியல் தகுதியை பெற முடியும் என்று அறிஞர்கள் கருதினர். இந்திய மொழிகளில் முதலில் சமஸ்கிருதமும், பின் தமிழும் செவ்வியல் மொழிகள் என்று உலக அறிஞர்களால் கண்டறியப்பட்டன. தமிழ் மொழியின் பழமை வாய்ந்த இலக்கியங்கள் சமஸ்கிருதத்தை போலல்லாமல் மிகவும் தாமதமாக ஐரோப்பிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டன. இந்த காரணத்தினால் தமிழானது செவ்வியல் மொழியாக அறியப்பட கால தாமதம் ஏற்பட்டது.

நமது கருத்துகளை தொகுத்து கூறினால், "செவ்வியல் மொழி என்பது செம்மையான பழமை வாய்ந்த இலக்கியங்களை கொண்டிருக்கும் மொழி ஆகும்". செம்மையான இலக்கியங்கள் என்பன, கிரேக்க மற்றும் இலத்தீன் மொழிகளின் இலக்கியங்கள் போன்ற பண்புகளை கொண்டிருக்கும் இலக்கியங்கள் ஆகும். இந்த பண்புகளாவன பழமை, தெளிவு, கட்டுபாடு மற்றும் பிற கிரேக்க, இலத்தீன் இலக்கியங்கள் கொண்டிருக்கும் பண்புகளை குறிக்கின்றன. செவ்வியல் என்ற கருத்தை நிறைவு செய்யும் பழமையை மட்டுமின்றி தற்காலத்திலும் அவ்வகை பழமை வாய்ந்த இலக்கியங்களை கொண்டிருப்பதும் மிகவும் முக்கியமானதாகும். பழமை என்பதற்கான துல்லியமான கணிப்பு முறைகள் இல்லாவிட்டாலும் தொடர்ச்சியான புரிதல் மூலம் இது 1500 முதல் 2000 வருடங்கள் வரை என்று உணரப்பட்டுள்ளது.
டிஜிட்டலைசேஷன் மற்றும் மின் புத்தகங்கள் பற்றிய உங்கள் பார்வை என்ன?
எழுதுதல் என்பது அறிவை பாதுகாக்கிறது; அச்சிடல் என்பது அறிவை பரப்புகிறது. நாம் தற்போது வாழும் உலகில் வேகம் மற்றும் தகவல் சேர்கின்ற வேகம் ஆகியவை அதிகம் முக்கியத்துவம் பெற்றுள்ளன. மேலும் அறிவு புரட்சி மற்றும் புதிய அறிவு உருவாகும் நம்ப முடியாத வேகம் போன்றவற்றினால் பாரம்பரியமான அச்சுத் துறையை விடவும் அதிக வேகமான, சிறப்பான ஊடகம் ஒன்று தேவைப் படுகிறது. இந்த புதிய தேவையை மின் புத்தகங்கள் மற்றும் மின் நூலகம் போன்றவை தீர்த்து வைக்கின்றன. இன்று ஒருவர் எளிதாக கலைக்களஞ்சியங்கள் எனப்படுபவையை விட மிக அதிக அளவிலான செய்திகளை, அறிவினை இணையத்தின் மூலம் பெற முடிகிறது. நம்பகமான மற்றும் துல்லியமான இடங்களிலிருந்து சரியான தகவல்களை ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் பெற முடிவது உண்மையில் ஆச்சரியமான விஷயமாகும். டிஜிட்டலைசேஷன் என்பது தகவல்கள் அடைய முடியாத நிலையிலிருக்கும் பலருக்கும் மதிப்பு வாய்ந்த தகவல்கள் சென்று சேருவதற்கு ஒரு வழியாக இருக்க வேண்டும்.
நீங்கள் இந்திரா காந்தி தேசிய திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவி வகித்துள்ளீர்கள் மற்றும் தற்போது தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் தலைவராக உள்ளீர்கள். இந்நிலையில் இவ்விரு பயிற்று முறைகளின் ஒப்பீட்டு பார்வையை கூறுங்கள்...
இந்திரா காந்தி தேசிய திறந்த நிலைப் பல்கலைக்கழகம் என்பது ஒரு பல்நோக்கு கல்வி நிறுவனம், இது தனது கற்பித்தல் முறைகளில் அச்சிட்ட புத்தகங்கள், நேரடியான உரையாடல்கள், அசைன்மென்ட்கள் மற்றும் வகுப்பறைகள் போன்றவற்றை பயன்படுத்துகிறது. தமிழ் இணைய பல்கலைக்கழகம் இவ்வாறான அச்சிட்ட புத்தகங்கள், நேரடி உரையாடல்கள் போன்றவற்றை பயன்படுத்துவதில்லை. ஆனால் இவ்விரண்டும் ஒன்று போன்றதான ஊடகங்கள்தான். இந்திரா காந்தி தேசிய திறந்த நிலைப் பல்கலைக்கழகம் என்பது வழக்கமான தொலை நிலைக் கல்வி முறைகள் மூலம் எல்லா பாடங்களையும் வேறு எந்த பல்கலைக்கழங்களையும் போலவே கற்றுத் தந்து வருகிறது. ஆனால் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தமிழ் மொழியை மட்டுமே தமிழ் சமூகத்திற்கு கற்பித்து வருகிறது. தமிழ் கற்பிக்க விரும்பும் எந்த உலகத் தமிழரும் தமிழ் மொழியை இங்கு கற்றுக் கொள்ள முடியும். வேறு எந்த பாடத்தையும் தமிழ் இணையப் பல்கலைக் கழகம் கற்பிக்கவில்லை. நான் அறிந்த வரை ஒரு குறிப்பிட்ட மொழியை மட்டும் கற்றுத் தரும் இணைய பல்கலைக்கழகமாக உருவாக்கப்பட்டுள்ள ஒரேப் பல்கலைக்கழகம் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் ஆகும்.
உங்களைப் பொறுத்த வரை இந்திய மொழிகள் அனைத்திற்குமான தேவைகள் என்று நீங்கள் கருதுவன எவையெவை?
பொதுவாக ஒரு மொழியானது, அம்மொழியை பேசும் மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் ஆன்மீக தேவைகளை பூர்த்தி செய்வதாக அமைய வேண்டும். ஒரு நாட்டில் முன்னேற்றம் ஏற்படும் போது அவை மக்களின் மொழியில் வெளிப்பட வேண்டும். இந்தியாவைப் பொறுத்த வரை 200 ஆண்டுகள் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்துள்ளது. அதனால் பல நிலைகளில் நிகழ்ந்த முன்னேற்றங்கள் மக்களின் மொழிகளில் வெளிப்படவில்லை. மேலும் ஆங்கிலம் இணைப்பு மொழியாகவும் மற்றும் உயர் நிலை கல்விக்கான மொழியாகவும் பயன்படுத்தப் பட்டது. இதனால்தான் தகவல்கள் மற்றும் அறிவுகள் உலகளவில் உள்ளதற்கும் நமது இந்திய மொழிகளில் உள்ளதற்குமான இஅடைவெளி பெரிய அளவில் ஏற்பட்டுள்ளது. இந்த இடைவெளிதான் இந்திய மொழிகளில் உள்ள குறைபாடுகளுக்கும் மிக முக்கியமான காரணமாகும். இன்னும் ஒரு கவலையளிக்க கூடிய நிகழ்வு என்னவென்றால் நவீன உலகின் அறிவு மிக அதிக வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. நமது மொழிகள் மற்ற அயல் நாடுகளின் மொழிகளுடன் முன்னேறும் வேகத்துடன் ஈடுகொடுக்க முடியாமல் இருக்கின்றன. உண்மையில் நாம் முன்னர் குறிப்பிட்ட அந்த இடைவெளியை நிரப்ப முடியாமல்தான் போராடிக் கொண்டிருக்கிறோம். இதுதான் நமது மொழிகளின் குறைபாடுகளுக்கு காரணம். இவற்றை சரியாக கண்டறிந்து அதனை சரி செய்யும் வழிமுறைகளை கண்டறிந்து விடுவோமானால் நம்முடைய மொழிகள் விரைவில் சிறப்பான நிலையை அடைய முடியும்.

கணினி அறிவியல் மற்றும் கணினி தொழில்நுட்பம் என்று எடுத்துக் கொண்டால் நாம் மற்ற உலக நாடுகளிலிருந்து பெரிய அளவில் பின்தங்கியிருக்கவில்லை. நாம் அவர்களை மிக நெருக்கமாக பின் தொடர்ந்து கொண்டுள்ளோம். அதேபோல் அத்துறை சார்ந்த நமது இலக்கியங்களும் அயலக மொழிகளுக்கு மிகவும் நெருங்கிய அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளதும் உண்மைதான்.
இந்திய மொழிகளை பொறுத்தவரை மொழியியல் சார்ந்த கணினிக்கருவிகள் போதுமானதாக இல்லை. நாம் இன்னும் தொடக்கக்கட்டத்தில்தான் இருக்கிறோம். நாம் இது போன்ற மென்பொருள் கருவிகள் உருவாக்கத்தில் எவ்வாறு தன்னிறைவு அடைவது?
கணினி மொழியியல் சார்ந்த மென்பொருள் கருவிகளை உருவாக்க வேண்டும் என்று விரும்பினால் நாம் முதலில் மொழிமாற்றம், சொல் திருத்திகள், எழுத்து அறியும் மென்பொருள், தேடு பொறிகள் போன்றவற்றை உருவாக்க முனைய வேண்டும். அதேசமயம் விசைப்பலகை மற்றும் குறியீட்டு முறை சார்ந்த விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இந்த செயல்கள் ஆழமான ஆய்வுகள் மற்றும் சிறந்த முதலீடுகள் போன்றவற்றுடன் இணைந்த சாதனைகளை அடிப்படையாக கொண்டுள்ளது. இதில் பன்னாட்டளவிலான நிறுவனங்களின் உதவியுடன் நம்முடைய உள்நாட்டளவிலான வலிமையான ஆரம்பம் மற்றும் ஆய்வும் அவசியம் என்று கருதலாம்.
நவீன மயமாக்கல், கலை சொல்லாக்கம் தொடர்பான தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...
உலகில் உள்ள மொத்த அறிவுத்திறனும் ஏறத்தாழ 25 தலைப்புகளின் கீழ் அடங்கிவிடும். ஒரு சமூகத்தின் தேவைகளை தீர்க்க ஒரு மொழியானது இந்த 25 தலைப்புகளின் கீழும் தேவையான அளவிற்கு புத்தகங்களை கொண்டிருக்க வேண்டும். இவ்வகை தலைப்புகளில் புத்தகங்களை உருவாக்க ஒரு மொழியை தயார்படுத்த வேண்டியதும் அவசியம். மேலும் இவ்வகையில் உருவாக்கப்படும் புத்தகங்களை பயன்படுத்துவதும் மிகவும் அவசியமானதாகும்.

இயல்பாக வளர்ச்சி என்பது ஆக்கம் மற்றும் பயன்படுத்துதல் என்ற இரண்டு நிலைகளை கொண்டுள்ளது. இதனை ஈர மணலில் நடப்பதாக கொள்வதற்கு இணையாக கூறலாம். ஒரு அடியை பலமாக எடுத்து வைத்து பின்புதான் அடுத்த அடியை எடுக்க வேண்டும். அதனால் இயக்கம் நடைபெறும். இதே போல் ஒரு மொழியில் புத்தகங்களை புதிய தலைப்பின் கீழ் கொண்டு வருதல் என்பது முதல் அடி என்றால் அந்த புத்தகங்கள் பயன்படுத்தப்படுவது இரண்டாவது அடியாகும். இரண்டில் ஏதாவது ஒன்று நடவாமல் போனாலும் வளர்ச்சி என்பது இருக்காது. இம்முறையில் புதிதான புத்தகங்களை உருவாக்க மொழியானது மேம்படுத்தப்பட வேண்டும். இது சார்ந்த இலக்கண விதிகள், ஒழுங்குகள் போன்றவை உருவாக்கப்பட வேண்டும். இதுவும் தொடரச்சியான புத்தக உருவாக்கம் மூலம் நிகழக்கூடும். இது தொடர்பாகத்தான் 'கலைச்சொல்லாக்கம்' போன்ற கருத்துகளும் தோன்றுகின்றன. இந்த எல்லா நிகழ்வுகளும் மேற்குறிப்பிட்ட புத்தகங்கள் அதிக அளவில் உருவாக்கப்பட்டு அவை அதிக அளவில் பயன்படுத்தப்பட்டால்தான் ஊக்கப்படுத்தப்படும். மொழியின் முன்னேற்றம் மற்றும் மொழியில் கல்வி ஆகிய இரண்டும் ஒன்றையன்று சார்ந்தவை. இவ்விரு செயல்களிலுமே முன்னேற்றம் என்பது ஒரு சேர நிகழ வேண்டும்.