செய்திகள்
மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்பு திட்டம்
மொழிதான் ஒரு கலாச்சாரத்தின் இருப்பை பறை சாற்றுகிறது. மொழியானது பேசப்படுகிற ஒரு தொடர்பு ஊடகம் என்ற நிலையை  கடந்து ஒரு பண்பாட்டின் அடையாளமாகவும் உள்ளது. இவ்வகையில் தமிழ்மொழி, தமிழ் பண்பாட்டின் பழமையையும் அதன் வளமையையும் வெளிப்படுத்திக் கொண்டுள்ளது. தமிழ் மொழியின் பழமைக்கும் வளமைக்கும் ஆதாராமாகவும், சாட்சியாகவும் இருப்பது அதன் தொன்மையான இலக்கியங்கள். தமிழ் மொழியானது உலகின் மிகவும் பழமையான நூல்களில் ஒன்றாக கருதப்படும் "தொல்காப்பியத்தை" இன்றும் கொண்டிருக்கிறது. இவ்வகை ஆதாரங்கள்தான் தமிழுக்கு செம்மொழி என்ற சிறப்பையும் பெற்று தந்துள்ளன. மேலும் இரண்டாயிரம் ஆண்டுகளாக மாறாத இலக்கண கட்டமைப்பையும் கொண்டுள்ளது. இத்தகைய சிறப்புகளை கொண்டிருக்கும் தமிழ் மொழி இன்றைய நவீன தொழில்நுட்பத்துடனும் இணைந்து அடுத்தக்கட்ட வளர்ச்சியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. அதே வேளையில் தமிழ் மொழியின் தொன்மையான சிறப்புகளை நமக்கு பின்வரும் தலைமுறைகளுக்கு பாதுகாத்து தர வேண்டிய கடமையும் நமக்கு உள்ளது. இதனை உணர்ந்து உருவாக்கப்பட்டுள்ள திட்டமே "மதுரை திட்டம்" ஆகும்.

இந்த திட்டம் தமிழின் இலக்கியங்கள் அனைத்தையும் மின்பதிப்புகளாக மாற்றி கணினியில் சேமித்து இனி வரும் காலங்களில் எல்லா உலக தமிழர்களும், தமிழ் ஆர்வலர்களும் இலவசமாக, எளிதாக கணினியிலிருந்தே தமிழ் நூல்களை படித்துக் கொள்ள முடிய வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. மதுரைத் திட்டம் முழுமையாக ஒரு தன்னார்வ கூட்டு முயற்சியாகும். இதில் எந்த வித அரசாங்க அல்லது தனியார் உதவிகளும் பெறப்படவில்லை. உலகின் வெவ்வேறு நாடுகளில் வாழும் முன்னூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்களும் தமிழார்வலர்களும் இத்திட்டத்தில் தற்போது பங்கேற்று வருகின்றனர். 1998-ம் ஆண்டு முதல் இத்திட்டம் இயங்கி வருகிறது. மேலும் இதில் பங்கேற்க விரும்பும் எவரும் இதில் பங்கேற்கலாம்.

இத்திட்டத்தின் படி இணையப்பக்கத்தில் தமிழ் நூல்களை நேரடியாக படிக்க முடியும். மேலும் இதனை பி.டி.எஃப் வடிவத்திலும் படிக்கமுடியும். மேலும் 2003-ம் ஆண்டு யுனிக்கோட் அறிமுகத்திற்கு பின் உருவாக்கப் படும் நூல்கள் யுனிக்கோட் வடிவத்திலும் உருவாக்கப்பட்டு இணையம் வழி வெளியிடப்பட்டு வருகின்றன. இவற்றில் சங்ககால நூல்கள் முதல் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் நூல்கள் வரை எல்லா நூல்களும் வெளியிடப்பட திட்டமிடப்பட்டுள்ளது. (காப்புரிமை பெற்ற நூல்களின் அனுமதி பெறப்பட்டே வெளியிடப்படுகிறது). இந்த இணையத்தளத்தின் முகவரி: http://www.tamil.net/projectmadurai

இதுவரை ஏறத்தாழ 200 தலைப்புகளில் தமிழ் நூல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. சிறப்பம்சமாக தற்போது, ஸர்ச் எஞ்சின்கள் எனப்படும் தேடு பொறிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் குறிப்பிட்ட இலக்கியத்தில் குறிப்பிட்ட பாடலை தேர்ந்தெடுத்து படிக்க விரும்புவோர் இனி பாடலை தேடி அலைய தேவையில்லை. எளிதாக தேடப்படும் பாடலை கண்டறிந்து படித்துக் கொள்ளலாம். இம்முயற்சி உண்மையில் முழுமனதுடன் பாராட்ட வேண்டிய மற்றும் வரவேற்க வேண்டிய ஒரு முயற்சியாகும். மேலும் எல்லா தமிழர்களும் இம்முயற்சியில் பங்கேற்க வேண்டியது அவரவர் கடமையென கருத வேண்டும். தமிழ் மொழிக்கும், மொழி சார்ந்த கணினி துறைக்கும் இது போன்ற முயற்சிகள் மிகவும் அத்தியாவசியமான மற்றும் சிறப்பான முன்னேற்றம ஆகும். இம்முயற்சி வெற்றிகரமாக நிகழ்வதற்கும், விரைவாக நடப்பதற்கும் வாழ்த்துகள்.