சி-ஷார்ப் நூல்

கம்ப்யூட்டர் உலகில் புரோகிராமிங் மொழி இருந்தால்தான் பல படைப்புகள் விரிவடையும். இப்புரோகிராமிங் துறையில் மைக்ரோசாப்டின் சி-ஷார்ப்பின் பயன்பாடு பன்னாட்டு மையங்களில் பெரும் பங்கு வகிக்கிறது. தற்போது கண்ணதாசன் பதிப்பகத்தில் புவனேஸ்வரி என்ற எழுத்தாளர் சி-ஷார்ப்பிற்காக 600 பக்கங்கள் உடைய அருமையான நூலைப் படைத்துள்ளார். இந்நூலுடன் மாதிரி மென்பொருளை கற்பதற்கான மென்பொருள் சிடியும் அளிக்கப்பட்டுள்ளது.
சி-ஷார்ப் மொழியைப் பயன்படுத்தி சி, சி++ போல சிஸ்டம் சாஃப்ட்வேர்களை உருவாக்க முடிவதோடு, விசுவல் பேசிக் போல அப்ளிகேஷன் சாஃப்ட்வேர்களையும், ஏ.எஸ்.பி. போல இணைய பக்க வடிவமைப்புகளையும் உருவாக்க முடியும்.
டாட் நெட் என்ற கட்டமைப்பில் விஷுவல் பேசிக் டாட் நெட், ஏ.எஸ்.பி. டாட் நெட் மற்றும் சி-ஷார்ப் டாட் நெட் என்று மூன்று பிரிவுகளில் புரோகிராம் எழுத முடியும். டாட் நெட்டின் சிறப்பம்சமே... ஒரு மொழியை மற்றொரு மொழியோடு தொடர்புபடுத்தி புரோகிராம் எழுதும் தன்மையே... டாட் நெட்டில், சி ஷார்ப்பை விஷுவல் பேசிக் டாட் நெட் மூலம் தொடர்பு கொடுத்து வெப் பக்க வடிவமைப்புகளையும் உருவாக்கமுடியும். சி-ஷார்ப்பை நேரடியாக, தனியாகப் பயன்படுத்தி கன்சோல் அப்ளிகேஷன் மூலம் சிஸ்டம் சாஃப்ட்வேர்களையும் தயாரிக்க முடியும்.
சி-ஷார்ப் டாட் நெட்டின் விண்டோஸ் அப்ளிகேஷனுக்காக எழுதப்பட்டுள்ள இப்புத்தகத்தில் விஷுவல் பேசிக் டாட் நெட்டின் மூலம் புரோகிராம் எழுதமுடியும். சி-ஷார்ப் மொழியின் வரைமுறைகளோடு (syntax), விஷுவல் பேசிக் டாட் நெட்டின் டூல்ஸ்களைப் பயன்படுத்தி, அதிலுள்ள மேலான வசதிகளை சி-ஷார்ப்பி்ல் இணைத்துக்கொண்டு புரோகிராம் எழுத முடியும். விஷுவல் பேசிக் டாட் நெட் மூலம் உருவாக்கப்படும் சாஃப்ட்வேர்களை விட விஷுவல் பேசிக்கை சி-ஷார்ப் டாட் நெட்டில் இணைத்து உருவாக்கப்படும் சாஃப்ட்வேர்கள் மிக சிறப்பாக இயங்கக் கூடியதாக இருக்கும். ஏனெனில் சி-ஷார்ப்பில் உள்ள கிளாஸ் மற்றும் ஆப்ஜெடக்டுகள் எழுதப்படும் புரோகிராம்களுக்கு, மிகுந்த பாதுகாப்பையும், உறுதியையும் அளிப்பதாக உள்ளது.