சான் ஃபிரான்சிஸ்கோவில் நடைபெற்ற "வலையின் தேவதை" (பியூட்டி ஆஃப் தி வெப் - Beauty of the Web) நிகழ்ச்சியில் விண்டோஸ் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 பீட்டா என்ற தனது புதிய வலை உலாவியை (வெப் பிரவுசர்) வெளியிட்டது மைக்ரோசாஃப்ட் கார்ப்பரேஷன். விண்டோஸ் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 உலாவியுடன் இணக்கமான வகையில், அதன் முழு திறனையும் உலகுக்கு வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட 70 க்கும் மேற்பட்ட வலைத்தளங்களும் இந்த நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.
சிறந்ததொரு வலைப் பயன்பாட்டு அனுபவத்தை பயனர்களுக்கு வழங்க, விண்டோஸ் இயங்குதளம் மற்றும் கணினியின் ஒட்டுமொத்த திறனையும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 பயன்படுத்துகிறது என்று குறிப்பிடும் விண்டோஸ் மற்றும் விண்டோஸ் லைவ் பிரிவின் தலைவர் ஸ்டீவன் சினாஃப்ஸ்கி, “இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 பீட்டா பதிப்பை எங்கள் கூட்டாளர்களுடன் இணைந்து, மிகவும் அழகானதொரு உலாவல் அனுபவத்தை உலகெங்கிலும் உள்ள விண்டோஸ் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்” என்றும் தெரிவித்துள்ளார்.
விண்டோஸ் 7 -இன் ஒட்டுமொத்த திறனையும் பயன்படுத்தி, பொது மக்கள் பெரிதும் விரும்பும் வலைத்தளங்கள் மற்றும் பயன்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த புதிய வலை உலாவி, அதிவேகமாக செயல்படுவதாகவும், மிகுந்த நம்பகமானதாகவும் இருக்கும். அது மட்டுமின்றி, HTML5 போன்ற மிக நவீன தரநிலைகளுக்கான ஆதரவும் இந்த புதிய வலை உலாவியில் உண்டு. இதுபோன்ற நவீன கட்டமைப்பில் உருவாக்கப்பட்டு, ஃபேஸ்புக், ரெட்புல் GmbH, க்விக்சில்வர் இன்க், ரஃப் கைட்ஸ் லிமிடெட், ஈஹௌ இன்க் (eHow Inc.), லிவ்ஸ்ட்ராங்க், ட்விட்டர், டெய்லிமோஷன், தி வால்ஸ்ட்ரீட் ஜர்னல், சிஎன்என் போன்ற கூட்டாளர்களுடன் இணைந்து வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய வலை உலாவி, இணைய சமூகத்திற்கு புதியதொரு வலை அனுபவத்தை வழங்க முடியும்.
"வலை என்பது தளங்களைப் பற்றியது; உங்கள் உலாவியும் அதையே முன்னிலைப்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட தளங்களை பிரகாசிக்க வந்துவிட்டது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9. வலையில் இதற்கு முன் சாத்தியமில்லாத இப்படிப்பட்ட செறிவுநிலையை உருவாக்க, பல தளங்கள் எங்களை அணுகியுள்ளது பெருமகிழ்ச்சி அளிக்கிறது" என்று விண்டோஸ் இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் கார்ப்பரேட் துணைத் தலைவர் டீன் ஹச்சாமோவிச் குறிப்பிட்டுள்ளார்.
"வலையின் தேவதை" நிகழ்வில் பங்கேற்ற கூட்டாளர்கள் விவரம்:
• தலைசிறந்த நான்கு சமூகக் கூட்டிணைப்பு தளங்களான ஃபேஸ்புக், மைஸ்பேஸ், லிங்க்ட் இன், நெட்லாக்
• மிகப்பெரிய நிகழ் நேர தகவல் பகிர்வுச் சேவையான ட்விட்டர்
• வணிகம் (Amazon.com), ஏலம் (eBay) மற்றும் பொழுதுபோக்கு தகவலுக்கான (IMDB) தலைசிறந்த தளங்கள்
• ஐரோப்பிய பொழுதுபோக்கு நெட்வொர்க்கில் முன்னிலை வகிக்கும் RTL
• சீனவின் முன்னணி போர்ட்டலான சோஹூ (Sohu)
• முன்னணி செய்தித் தளங்கள்: சிஎன்என், யுஎஸ்ஏ டுடே
• முன்னணி தேடல் தளமான பிங் (Bing)
• முன்னணி பயண ஏற்பாட்டுத் தளமான ஆர்பிட்ஸ்
• முன்னணி திரைப்படத் தளமான ஃபிளிக்ஸ்டர்
• முன்னணி மல்டிமீடியா தளமான ஹூலூ (Hulu)
• முன்னணி இசைத் தளமான கொரில்லாஸ் (Gorillaz)
• முன்னணி புகைப்படத் தளமான ஃபோட்டோபக்கெட்
• டெய்லி மோஷன்
மேலே குறிப்பிட்டுள்ள கூட்டாளர்களின் தளங்கள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக, அன்றாடம் 80 கோடி மக்களைச் சென்றடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய வலை உலாவியுடன் ஆன்லைன் ஷாப்பிங் தளமான கபூடுல் (Kaboodle), பயண ஏற்பாட்டுத் தளமான ஆர்பிட்ஸ் (Orbitz) போன்ற தளங்கள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளதால், ஒரு தயாரிப்பு அல்லது தங்குமிடங்களைத் தேடுவது மிகவும் விரைவான, எளிமையான பணியாகிறது.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 உலாவியின் சிறப்பம்சங்கள்:
• மிகச் சிறந்த பயனர் அனுபவத்தை விண்டோஸ் 7 இயங்குதளத்துடன் இணைந்து வழங்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 உலாவி, பயன்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அதுமட்டுமின்றி, பிக்ஸல் எண்ணிக்கை உலாவிக்கு அல்லாமல், வலைத் தளங்களுக்கு அதிகமாக வழங்கப்படுவதால் தளங்களும் அவற்றின் உள்ளடக்கமும் பிரகாசிக்கும் வாய்ப்பு அதிகமாகிறது.
• உலாவிக் கட்டுப்பாடுகள் வெகுவாகக் குறைக்கப்பட்டு கண்ணாடி போன்ற அமைப்பில் சுருக்கப்படுவதால், மக்கள் அனைவருக்கும் வலை உள்ளடக்கமே முதன்மையாகத் தோன்றும்.
• விண்டோஸ் 7 இயங்குதளத்தில் கையாளப்பட்ட வடிவமைப்புக் கொள்கைகள், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 உலாவியிலும் பயன்படுத்தப்பட்டுள்ளதால், அடிப்படைக் கணினிப் பயன்பாடுகள் தோன்றுவதைப் போலவே தளங்களும் காட்சியளிக்கும்.
• உலாவியைத் திறக்காமலேயே, பயனர்கள் தங்களுக்குப் பிடித்த வலைத் தளங்களை விண்டோஸ் பணிப்பட்டி வழியாக அணுகும் வசதியை Pinned Sites என்ற அம்சம் வழங்குகிறது.
• மின்னஞ்சல் உருவாக்குதல், நட்பு அழைப்பிதழ்களை ஏற்றுக்கொள்ளுதல் அல்லது சமீபத்திய செய்தியைப் பார்த்தல் போன்ற வழக்கமான வலைத்தளப் பணிகளை, உலாவியைத் திறக்காமலேயே விரைவாகவும் எளிமையாகவும் செய்யும் வசதியை, JumpLists என்ற அம்சம் வழங்குகிறது.
• குறிப்பிட்ட ஒரு தயாரிப்பை வெவ்வேறு தளங்களில் ஒப்பிட்டுப் பார்க்கும் வகையில் இரண்டு தளங்கள் அல்லது இரண்டு பக்கங்களை ஒரே நேரத்தில் பார்க்கும் வசதியை Tear-off தாவல்கள் மற்றும் Windows Aero Snap தாவல்கள் அம்சம் வழங்குகிறது. அது போல, மின்னஞ்சல் படித்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் ஒரு வீடியோவைப் பார்க்கலாம், அல்லது பயணத் திட்டத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் அது தொடர்பான வரைபடத்தை (மேப்) பார்க்கும் வசதியையும் இந்த அம்சம் வழங்குகிறது.
• நவீன கணினி வன்பொருளின் சக்தியை, "சக்ரா" என்ற புதிய ஸ்க்ரிப்டிங் என்ஜின் மூலம் பயன்படுத்தி, ஒட்டுமொத்த வலை உலாவல் திறனை இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் இந்த புதிய பதிப்பு மேம்படுத்துகிறது. HTML5 தரநிலைக்கான வன்பொருள் தேவையை முழுமையாகப் பயன்படுத்தும் முதல் வலை உலாவி இது என்பது குறிப்பிடத்தக்கது. HTML5, ஸ்கேலபில் வெக்டார் கிராஃபிக்ஸ் (SVG), CSS3 மற்றும் இதர நவீன வலை தரநிலைகளுக்கான முழு ஆதரவும் இந்த புதிய வலை உலாவியில் உண்டு.
பாதுகாப்பு மற்றும் நம்பகத்தோடு உருவான உலாவி
தனது வாடிக்கையாளர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்புக்கு எப்போதும் முன்னுரிமை அளித்து வரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 பதிப்பை உள்கட்டமைந்த பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் நம்பகத் தொழில்நுட்பத்துடன் உருவாக்கியுள்ளது.
• கோப்புகளை பயனர்கள் பதிவிறக்கும்போது, அதன் நம்பகத்தன்மையை தானாகவே கணித்து, சரியான நேரத்தில் சரியான கோப்பை அனுமதித்து, சரியான நேரத்தில் தீம்பொருள் கொண்ட கோப்புகளைத் தடுக்கும் வல்லமை பெற்ற ஸ்மார்ட்ஸ்கிரீன் ஃபில்டர் இந்த புதிய வலை உலாவியின் ஒரு சிறப்பம்சமாகும்.
• ஆட் ஆன்ஸ் என்றழைக்கப்படும் துணை நிரல்கள் உலாவல் நேரத்தை அதிகரிக்கும் சூழல்களில், அதுபற்றி பயனருக்கு அறிவிக்கும் ஆட் ஆன்ஸ் செயல்திறன் ஆலோசனை வசதியும் இந்த புதிய உலாவியில் சேர்க்கப்பட்டுள்ளது.
• தானியங்கு மீட்பு வசதி, தாவல் வசதி போன்ற இதர நம்பகத்தன்மைக்கான அம்சங்களுடன், குறிப்பிட்ட ஒரு வலைத்தளம் தொழில்நுட்பக் கோளாறு அல்லது வேறு சில சிக்கல்களால் சரியாக இயங்காமல் போகும் நேரங்களில், பயனரின் தகவல் ஏதும் இழக்காத வகையில் தரவுப் பாதுகாப்பு அம்சத்துடன் இந்தப் புதிய வலை உலாவி வடிவமைக்கப்பட்டுள்ளது.
விண்டோஸ் மற்றும் நவீன வன்பொருள் தொழில்நுட்பத்துடன் வெளியாகியுள்ள இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 என்ற இந்த புதிய உலாவி, வலையின் திறன் மற்றும் உலாவல் அனுபவத்தை மேம்படுத்தும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை. இதுநாள் வரை வலைக்குள் புதைந்திருந்த அழகைக் கண்டுபிடித்து, உலாவியின் அம்சங்களுக்கு மெருகேற்றி, டெஸ்க்டாப் பயன்பாடுகளைப் பயன்படுத்துவது போன்ற அனுபவத்தை உலாவிக்கு வழங்கி, பயனீட்டாளர்களின் உலாவல் அனுபவத்தை இனிமையாக்க, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 என்ற புதிய உலாவியைப் பதிவிறக்க, BeautyoftheWeb.com தளத்திற்குச் செல்லவும்.