மைக்ரோசாஃப்ட் ஸ்கைப்

 

           உலகின் முன்னணி தகவல் தொடர்பு நிறுவனமான ஸ்கைப்பை மைக்ரோசாஃப்ட் கையகப்படுத்தும் தீர்மான ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டிருப்பதாக மைக்ரோசாஃப்ட் மற்றும் ஸ்கைப் குளோபல் நிறுவனங்கள் கூட்டாக அறிவித்துள்ளன.  இந்தத் தீர்மான ஒப்பந்தம், சில்வர் லேக் தலைமையிலான முதலீட்டுக் குழுவினரால் 8.5 பில்லியன் டாலர்களுக்கு நிறைவேற்றப்பட்டது. மைக்ரோசாஃப்ட் மற்றும் ஸ்கைப் ஆகிய இரு நிறுவனங்களின் இயக்குநர்கள் குழுவும் இந்த ஒப்பந்தத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்துள்ளனர்.

 

          இந்தக் கையகப்படுத்தலின் மூலம், நிகழ் நேர வீடியோ மற்றும் குரல் வழி தகவல் தொடர்பை அணுகும் பயனர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும், இதன் மூலம் இரண்டு நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்கும், தொழில்முறை பயனர்களுக்கும் மேலதிக பலன்களை வழங்குவதோடு, புதிய வர்த்தக மற்றும் வருவாய் வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் கூறப்படுகிறது. ஸ்கைப்பின் உலகத் தரம் வாய்ந்த அதன் தொழில்நுட்பத்தை மேலதிக பயனர்களிடம் கொண்டு சேர்ப்பது மட்டுமின்றி தனது சிறந்த நிகழ்நேர தகவல்தொடர்பு தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் பட்டியலில் ஸ்கைப்பையும் சேர்த்துவிட்டது மைக்ரோசாஃப்ட்.

 

          170 மில்லியன் பயனர்களுடனும், 2010 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 207 பில்லியன் நிமிட நேரத்திற்கு குரல்  மற்றும் வீடியோ உரையாடல்களை நிகழ்த்தியுள்ள ஸ்கைப் நிறுவனம், நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் வணிகப் பணியாளர்களை உலகளாவிய அளவில் சிறந்த, அர்த்தமுள்ள வகையில் இணைத்துள்ளது என்றே கூறலாம். மூன்றாவது காலாண்டில் 30 விழுக்காடு அதிக வருவாய் ஈட்டிய லிங்க், அவுட்லுக், மெசஞ்சர் மற்றும் எக்ஸ் பாக்ஸ் லைவ் உள்ளிட்ட தனது பல்வேறு தளங்களில் நிகழ் நேர தகவல் தொடர்பில் நீண்ட நாள் கவனத்தையும், முதலீட்டையும் செய்வதில் முனைப்புடன் இயங்கி வருகிறது மைக்ரோசாஃப்ட்.

 

           எக்ஸ் பாக்ஸ் மற்றும் கைனெக்ட் போன்ற மைக்ரோசாஃப்ட் சாதனங்களிலும், விண்டோஸ் ஃபோன் உள்ளிட்ட பலவகையான விண்டோஸ் சாதனங்களிலும் ஸ்கைப் இயங்குமாறு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, லிங்க், அவுட்லுக், எக்ஸ்பாக்ஸ் லைவ் மற்றும்பிற சமூகங்களுடன் ஸ்கைப் பயனர்களை மைக்ரோசாஃப்ட் இணைக்கும். மைக்ரோசாஃப்ட் அல்லாத பிற இயங்குதளங்களில் ஸ்கைப் கிளையன்ட்களில் தொடர்ந்து முதலீடு செய்து, தொடர்ந்து தனது ஆதரவை மைக்ரோசாஃப்ட் வழங்கும்.

 

            உலகளாவிய அளவில் லட்சக்கணக்கான மக்களால் பெரிதும் விரும்பப்படும் ஈடு இணையற்ற சேவையை ஸ்கைப் வழங்கி வருவதாகக் குறிப்பிடும்  மைக்ரோசாஃப்ட்டின் தலைமைச் செயல் அதிகாரி ஸ்டீவ் பால்மர், நிகழ் நேர தகவல் தொடர்புத் தொழில்நுட்பத்தில் இருவரும் இணைந்து  ஒரு புதிய புரட்சியை உருவாக்குவோம் என்று ஆர்வத்துடன் தெரிவிக்கிறார்.

 

             மைக்ரோசாஃப்ட்டின் புதிய வர்த்தகப் பிரிவாக ஸ்கைப் செயல்படும் என்றும், ஸ்கைப்பின் தலைமைச் செயல் அதிகாரி டோனி பேட்ஸ், மைக்ரோசாஃப்ட் ஸ்கைப் பிரிவின் தலைவராகப் பொறுப்பேற்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

              2003 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஸ்கைப் நிறுவனம், முதல் முறை 2005 ஆம் ஆண்டு ஈபே (eBay) நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் செப்டம்பர் 2009 ஆம் ஆண்டு சில்வர் லேக் தலைமையிலான ஒரு முதலீட்டுக் குழுவால் கையகப்படுத்தப்பட்டது. சில்வர் லேக்கின் தலைமையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மிகச் சிறந்த முன்னேற்றத்தை ஸ்கைப் நிறுவனம் பெற்றுள்ளது. மாதாந்திர அழைப்பு நிமிடங்கள் 150 விழுக்காடு உயர்ந்து, புதிய வருவாய் உத்திகளையும், கூட்டாளர் வாய்ப்புகளையும் உருவாக்கி, நேரடிப் பிணையப் பகிர்வுக்கு கூடுதல் ஆதரவு வழங்குவதிலும் சிறப்பாகப் பணியாற்றி வந்தது.

 

இனி என்ன... நேரடியாக மைக்ரோசாஃப்ட் தயாரிப்புகளிலும் ஸ்கைப்பலாமே...?

மேலும்...