நேர்காணல்: மொழியில் களப் பெயர்கள் குறித்து டான் டின் வீ - Tan Tin Wee

உங்கள் மொழியை நேசிப்பவராக நீங்கள் இருந்தால், பேராசிரியர் டான் டின் வீ அவர்களை அவ்வளவு எளிதில் உங்களால் புறந்தள்ளிவிட முடியாது. சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில், உயிரிவேதியியல் துறையில் பணியாற்றும் இவர், இணையத்தில் மொழிகளுக்காக, குறிப்பாக இந்திய மொழிகளுக்காக எண்ணிலடங்கா பங்களிப்புகளைத் தந்துள்ளார்.
இவரது தலைமையில், 1994 ஆம் ஆண்டு முதல் சீன வலைத் தளத்தையும், தமிழ் ஸ்கிரிப்டுகளைப் பயன்படுத்தி 1995 ஆம் ஆண்டு முதல் தமிழ் வலைத் தளத்தையும், 1996 ஆம் ஆண்டு பன்மொழி வலைத் தளத்தையும் சிங்கப்பூர் அரசு அறிமுகப்படுத்தியது. மொழிகளுக்கான இவரின் பங்களிப்புகளில், “சர்வதேச களப் பெயர் (International Domain Name – IDN)” என்ற கருத்து மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்தக் கருத்தின் மூலம், டொமைன் என்றழைக்கப்படும் இணைய தளங்களின் களப் பெயர்களில் மொழிகளைப் பயன்படுத்தலாம். கடந்த ஆண்டு கோவையில் நடைபெற்ற 9வது தமிழ் இணைய மாநாட்டில் “தமிழ் இணைய முன்னோடி” எனும் வருதை வழங்கி தமிழக அரசு இவரை கௌரவித்தது.
மொழிக் கணினியியல் குறித்து, குறிப்பாக சர்வதேச களப் பெயர்களின் வரலாறு, வளர்ச்சி மற்றும் நோக்கம் குறித்து பாஷா இந்தியாவுக்கு இவர் அளித்த நேர்காணல் விவரம் -
கேள்வி: பாஷா இந்தியா சார்பாக உங்களைச் சந்தித்து நேர்காணல் எடுக்கும் வாய்ப்பளித்தற்கு எங்கள் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறோம். “சர்வதேச களப் பெயர்” என்ற கருத்து குறித்து எங்களுடன் விரிவாகப் பகிர்ந்து கொள்ளுங்களேன்?
பதில்: சர்வதேச களப் பெயர்கள் (IDN) என்ற கருத்தின் மூலம் தமிழ், இந்தி போன்று ஆங்கிலம் அல்லாத உங்கள் தாய்மொழியில் களப் பெயர்களை வழங்குவதாகும். அதாவது, ஆங்கில (லத்தீன்) களப் பெயர்கள் வழங்கும் இடங்களில் ஆஸ்க்கி (ASCII) அல்லாத எழுத்துக்குறிகளைப் பயன்படுத்தி களப் பெயர்களை வழங்க முடியும்.
“சர்வதேச களப் பெயர்” குறித்து அறிந்து கொள்வதற்கு முன், “களப் பெயர்” குறித்து விளக்குகிறேன். இணையத்தில் வலைத் தளம் போன்ற இன்டர்நெட் புரோட்டோகால் (IP) ஆதாரத்தை பிரத்யேகமாகக் குறிக்கும் பெயரையே களப் பெயர் என்றழைக்கிறோம். களப் பெயர் அமைப்பைச் (Domain Name System - DNS) சார்ந்தே களங்கள் அமைக்கப்படுகின்றன. எண்களாக முகவரியளிக்கப்பட்ட வலைத்தளங்களுக்கு எளிதில் அடையாளம் காணக்கூடிய, எளிதில் நினைவில் கொள்ளக்கூடிய பெயர்களை வழங்குவதே களப் பெயர் அமைப்பின் முக்கிய நோக்கமாகும். 2010 ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, களப் பெயர்களின் எண்ணிக்கை 8.5 கோடிக்கு மேல் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இவற்றை அணுக, ஆங்கில (லத்தீன்) எழுத்துக்களையே பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது!
கேள்வி: களப் பெயர்களைப் பொருத்தவரை, உள்ளுர் மொழிகள் ஏன் சேர்க்கப்படவில்லை?
பதில்: அமெரிக்காவின் வரலாற்று ஆதிக்கமும், ASCII எழுத்துகளின் தொகுப்புமே ஆங்கிலத்தை தாய்மொழியாகப் பெற்றிடாத பயனர்களின் இணையப் பயன்பாட்டை கட்டுப்படுத்தியது. இருப்பினும், லத்தீன் அல்லாத மொழிகளைப் பயன்படுத்துபவர்களின் இணையப் பயன்பாடே அதிகமாகக் காணப்படுகிறது.
கேள்வி: வட்டார மொழி களப் பெயருக்கான குரல் எப்படி ஒலிக்கத் தொடங்கியது?
பதில்: மொழி உள்ளடக்கத்துடன் வலைப் பக்கங்கள் 1990 ஆம் ஆண்டுகளில் வெளிவரத் துவங்கியபோதே, மொழிக் களப் பெயருக்கான தேவையும் உருவானது. இதன் காரணமாகவே மொழி ஆர்வலர்கள் “சர்வதேச களப் பெயர்களுக்கான” கோரிக்கையை வலியுறுத்தத் தொடங்கினர்.
உலக மக்கள் தொகையில் 83 விழுக்காட்டினர் ஆங்கிலம் அல்லாத மொழியை தமது தாய்மொழியாகக் கொண்டிருப்பதால், களப் பெயர்களையும் அவர்கள் மொழியிலேயே வழங்க வேண்டும். உலகின் பெரும்பாலான இணையப் பயனீட்டாளர்களுக்கு மிகவும் பயனுள்ள ஆதாரமாக இணையத்தை உருவாக்கும் முயற்சிக்கான மிக முக்கிய முதல் படியே "சர்வதேச இணையப் பெயர்கள்" எனும் கருத்தாகும்.
1996 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மார்ட்டின் டர்ஸ்ட் என்பவரால் முதன் முதலாக IDN குறித்து முன்மொழியப்பட்டது. மேற்கொண்டு எனது தலைமையில் பல ஆராய்ச்சிகளும் சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு இறுதியாக IDN செயல்பாட்டுக்கு வந்தது என்பதில் பெருமை கொள்கிறேன். “பயன்பாடுகளில் களப் பெயர்களை சர்வதேசமயமாக்கல்” (Internationalizing Domain Names in Applications - IDNA) எனும் அமைப்பு ஒரு தரநிலையாகப் பின்பற்றப்பட்டு, பல்வேறு உயர் நிலைக் களங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
கேள்வி: ஒரு நபரால் இப்போது, "சர்வதேச களப் பெயர்களைப்" பதிவு செய்து பயன்படுத்தும் சாத்தியம் உள்ளதா?
பதில்: நான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல, 1998 ஆம் ஆண்டு முதலே செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு, பின்பற்றப்பட்டு வருகின்றன. IDN அமைப்பு முறையை தரநிலைப்படுத்த, "ஒதுக்கிய பெயர்கள் மற்றும் எண்களுக்கான இணையக் கூட்டமைப்பு" (Internet Consortium for Assigned Names and Numbers - ICANN) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, தனது இலக்கை ICANN அமைப்பு அடுத்த 10 ஆண்டுகளில் எட்டியது. இணையத்தில் உள்ள உயர் நிலைக் களங்களுக்கு சர்வதேச நாட்டு குறியீட்டைப் பயன்படுத்த 2009 ஆம் ஆண்டு ICANN அமைப்பு அங்கீகாரம் வழங்கியது. 2010 ஆம் ஆண்டு மே மாதம் DNS மூலப் பகுதியில் IDN நாட்டுக் குறியீடுக்கான உயர் நிலைக் களங்கள் முதன்முதலில் நிறுவப்பட்டன.
i-DNS.net போன்று, 60 க்கும் மேற்பட்ட மொழிகளில் களப் பெயர் பதிவுகளை அனுமதிக்கும் நிறுவனங்கள் உள்ளன. விரைவில் இது விரிவாக்கப்படும்.
கேள்வி: இச்செய்தியைக் கேட்பதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பொதுமக்களின் பயன்பாட்டுக்காக தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் களப் பெயர்களைக் காண மிகுந்த ஆர்வமாக உள்ளது. மொழிகளில் இணைய களப் பெயர்கள் இருப்பதன் மூலம் மொழிக் கணினியியல் துறை எவ்வாறு பயனடையும்?
பதில்: மொழிக் கணினியியலின் அடிப்படை நோக்கமே, கணினியின் பயனை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பதாகும். ஒவ்வொரு மனிதருக்கும், தனது சொந்த தாய்மொழியில் இணையத்தை அணுகும் உரிமை உள்ளது. மொழித் தடைகளைக் களைந்து இணையத்தில் தகவலை அணுகும் இந்த உரிமை அல்லது வாய்ப்பு ஒருவருக்கு வழங்கப்படும்போது, அனைத்து விஷயங்கள் குறித்த தகவலைப் பெற்று தனது அறிவை வளர்த்துக் கொள்ளும் அரிய வாய்ப்பு உள்ளது.
உலக மக்கள் தொகையில் பெரும்பாலானோருக்கு ஆங்கில மொழி பேசத் தெரியாது. அடிப்படை ஆங்கில மொழி அறிவு இல்லாமல், இணையத்தில் உள்ள ஆதாரங்களை ஒருவரால் அவ்வளவு எளிதில் பெற்றிட முடியாது. இணையத்தில் வட்டார மொழி உள்ளடக்கம் இருப்பது உண்மை என்றாலும், ஆங்கில மொழி அறிவு இல்லாதோர் எவ்வாறு அவற்றை அணுக முடியும்? எவ்வாறு அவர்களால் களப் பெயர்களை (வலைத்தள முகவரிகளை) உலாவியின் முகவரிப் பட்டியில் தட்டச்சு செய்ய முடியும். இந்தத் தடையை முறியடித்து விட்டால், உலக மக்கள் அனைவரும் இணையத்தைப் பயன்படுத்தி அதன் பலனைப் பெற முடியும். இணையத்தில் தங்கள் மொழி சிறக்க, தங்கள் பங்களிப்புகளை ஒவ்வொருவரும் வழங்கத் தொடங்குவர். இவ்வாறே, சர்வதேச களப் பெயர்கள், மொழிக் கணினியியலுக்கு பெரும் உதவியாய் இருக்கும்.
கேள்வி: ஆஸ்க்கி (ASCII) அல்லது லத்தீன் எழுத்துக்களைச் சார்ந்த களப் பெயர்களைப் போலவே, ஆங்கில மொழி பேசாத மக்களுக்கு மின்னஞ்சல் முகவரி அடையாளமும் ஒரு தடையாகவே இருந்து வருகிறது. சொந்த தாய் மொழியில் எப்போது அவர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரிகளைப் பெறுவர்?
பதில்: உயர் நிலைகளுக்கான சர்வதேச களப் பெயர்களின் அறிமுகத்தை ICANN அங்கீகரித்துள்ளது. மின்னஞ்சல் முகவரிகளில் ஆங்கில எழுத்துக்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற தடையும் நீக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தங்கள் மொழிகளில் மின்னஞ்சல் முகவரிகளை பயனர்கள் இப்போது பெறலாம்.
கேள்வி: தமிழ் உள்ளிட்ட பல இந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் மொழிக் கணினியியல் குறித்து சிறந்த தகவல் வழங்கக்கூடிய உள்ளடக்கத்தை பாஷா இந்தியா வழங்கி வருகிறது என்பதை அறிந்திருப்பீர்கள். மொழிக் கணினியியல் துறையின் ஆர்வலரும், வல்லுநருமான நீங்கள், இந்திய மொழிக் கணினியியலுக்கு பாஷா இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளை எவ்வாறு மதிப்பிடுவீர்கள்? எங்கள் முயற்சிகளை மேலும் சிறப்பாக்க, ஆலோசனைகள் தாருங்களேன்.
பதில்: பாஷா இந்தியா வலைத் தளத்தைப் பார்த்திருக்கிறேன். "சர்வதேச களப் பெயர்கள்" குறித்து சமீபத்தில் திரு.மணியம் (i-DNS.net இன்டர்நேஷனல் இன்க்) அவர்களின் நேர்காணலை பாஷா இந்தியாவில் படித்தேன். பாஷா இந்தியாவின் முயற்சி பாராட்டுதலுக்குரியது.
மிகச் சிறந்ததொரு ஆதாரத் தளமாகவும், படித்த மக்கள் முதல் பாமர மக்கள் வரையிலான அனைத்து தரப்பினரும் பயன் பெறும் வகையில் எளிமையாகவும், சாதாரண மொழியிலும் தொடர்ந்து மேலும் பல சிறந்த உள்ளடக்கத்தை வழங்க வேண்டும் என்றும், தகவல் தொழில்நுட்பத்தின் எல்லையற்ற ஆற்றலை அனைவருக்கும் கொண்டு செல்லும் ஒரு தளமாக தொடர்ந்து விளங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.