யூனிகோட் கூட்டமைப்பு

 

 


      பல்வேறு நாடுகள் மற்றும் மொழிகளில் எழுத்துரு பயன்பாடுகள் உருவாக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில், பல்வேறு மொழிகளின் எழுத்துக்குறிகளை கணினியில் திறம்பட எடுத்துக் காட்டுவதன் தேவை பன்மடங்காக அதிகரித்து வருகின்றது. அதுமட்டுமல்லாமல், குழப்பங்கள் ஏதுமின்றி பயன்பாடுகளை உருவாக்குவதற்கு தரநிலைப்படுத்திய குறியீட்டு வடிவமைப்பு இருப்பது இன்றிமையாததாகிறது.

 

இயங்குதளம், நிரல் மற்றும் மொழி என்று எந்த ஒரு காரணியையும் சாராமல், ஒவ்வொரு மொழியில் உள்ள எழுத்துக்குறிக்கும் பிரத்யேகமானதொரு அடையாள எண்ணை வழங்கும் முனைப்புடன் யூனிகோட் கூட்டமைப்பு இயங்கி வருகிறது. மைக்ரோசாஃப்ட், ஆப்பிள், ஹியூலெட்-பாக்கர்ட் (HP), ஆரக்கிள் மற்றும் பல முன்னணி மென்பொருள் மற்றும் வன்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் யூனிகோட் தரநிலைகளைப் பின்பற்றி வருகின்றன.

 

இன்டர்நெட் எக்ஸ்புளோரர், மோஸில்லா ஃபயர்ஃபாக்ஸ், கூகுள் குரோம், ஓபெரா, சஃபாரி போன்ற நவீன வலை உலாவிகள் மட்டுமல்லாது, விண்டோஸ், மேக், மற்றும் லீனக்ஸ் போன்ற இயங்குதளங்களும் யூனிகோட் குறியீட்டு முறையைப் பயன்படுத்தி வருகின்றன.

 

பல்வேறு மொழிகளின் யூனிகோட் குறியீட்டு முறை பற்றி நாம் அறிந்துகொள்ளவும், அவற்றைப் பயன்படுத்துவது குறித்த பல ஆவணங்களை யூனிகோட்.ஆர்க் (Unicode.org) வழங்குகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்திய ரூபாய்க்கான சின்னமும் (INR) யூனிகோட் குறியீட்டு முறையில் சேர்க்கப்பட்டு, அசல் சாதன தயாரிப்பாளர் (Original Equipment Manufacturer - OEM) வன்பொருளுடன் வெளியிடப்படவுள்ளது. இருப்பினும், இச்சின்னத்தின் படமும் யூனிகோடும் உடனடிப் பயன்பாட்டிற்காக ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டது.

 

இந்த யூனிகோடு கூட்டமைப்பு என்ற லாப நோக்கின்றி இயங்கும் அமைப்பு, Unicode.org என்ற தளத்தை திறம்பட நடத்தி வருகிறது. யூனிகோடு குறியீட்டு முறையை உருவாக்கி, வளர்த்து, அதை ஒரு குறியீட்டு தரநிலையாக எங்கும் பயன்படுத்துமாறு மேம்படுத்துவதே இந்த அமைப்பின் முக்கிய இலக்காகும். கணினியில் ஒரு எழுத்துக்குறி எவ்வாறு திட்டமிட்டு ஒதுக்கப்படுகிறது என்பது குறித்த சுவாரஸ்யமான தகவலுக்கு, "எனது எழுத்துக்குறி எங்கே? - Where is my Character?" என்ற பிரிவைப் பார்க்கவும்.

மேலும்...