விண்டோஸ் 8 இயங்குதளம்
ஒவ்வொரு நாளும் ஏற்பட்டு வரும் தொழில்நுட்பப் புரட்சியின் அடுத்த ஒரு மைல் கல்லாக விண்டோஸ் 8 இயங்குதளத்தை அறிமுகப்படுத்துகிறது மைக்ரோசாஃப்ட்.
முற்றிலும் புதிய பயனர் இடைமுகத்துடன் வரவிருக்கும் விண்டோஸ் 8 இயங்கு தளம், பிரபல ஸ்மார்ட்ஃபோன்களில் கையாளப்படும் தொடுதிரை அம்சத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டது. கணினியைத் தொடங்குவதில் ஆரம்பித்து, தங்களுக்குப் பிடித்த அல்லது தாங்கள் அதிகம் பயன்படுத்தும் பயன்பாடுகளிடையே பணியாற்றுவது வரை, பயனர்கள் மேற்கொள்ளும் அனைத்து செயல்களிலும் முற்றிலும் புதுமையான, சிறந்த அனுபவத்தை வழங்குமாறு விண்டோஸ் 8 இயங்குதளம் மிகுந்த கவனத்துடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.
ஸ்டார்ட் பொத்தான் அல்லது விண்டோஸ் விசையைப் பயன்படுத்தி தொடக்க மெனு செயல்பாடுகள் இயக்கப்பட்டு வந்த பயன்முறை இந்தப் புதிய விண்டோஸ் இயங்குதளத்தில் முற்றிலும் மேம்படுத்தப்பட்டு, புதிய பயனர் அனுபவத்தை வழங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. விரும்பினால் டெஸ்க்டாப் சார்ந்த பயன்பாட்டு முறைக்கும் மாறிக்கொள்ளும் அம்சமும் பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
வழக்கமான ஏ.எம்.டி. மற்றும் இன்டெல் மைக்ரோபிராசஸர்களுக்கு மட்டும் ஆதரவு வழங்குவதோடு நிறுத்தாமல் ஏ.ஆர்.எம். வகை மைக்ரோபிராசஸர்களையும் ஆதரிக்கும் வகையில் விண்டோஸ் 8 இயங்குதளம் கட்டமைக்கப்பட்டுள்ளது. அட்வான்ஸ்ட் ரிஸ்க் மெஷின் (Advanced RISC Machine) என்றழைக்கப்படும் இந்த ஏ.ஆர்.எம். வகை மைக்ரோபிராசஸர்கள் செல்பேசிகள், டிஜிட்டல் மீடியா மற்றும் மியூசிக் பிளேயர்கள், பி.டி.ஏ. சாதனங்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
விண்டோஸ் ஃபோன் 7 போன்ற ஸ்மார்ட்ஃபோன்களில் உள்ள தொடக்கத் திரையைப் போன்றே, விண்டோஸ் 8 இயங்கு தளத்தின் முகப்பும் இருக்கும். இதன்மூலம், பல புதிய கணினி வடிவமைப்புகளை உருவாக்கும் அற்புத வாய்ப்பை தனது வன்பொருள் கூட்டாளர்களுக்கு மைக்ரோசாஃப்ட் வழங்கியுள்ளது.
ஹெச்.டி.எம்.எல். 5 மற்றும் ஜாவாஸ்கிரிப்ட் போன்ற பொதுவான வலை தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விண்டோஸ் 8 இயங்குதளத்திற்கான பயன்பாடுகளை உலகெங்கிலும் உள்ள டெவலப்பர்கள் உருவாக்கலாம். முந்தைய விண்டோஸ் இயங்குதளங்களில் ஏற்கனவே உள்ள தங்கள் பயன்பாடுகளை விண்டோஸ் 8 இயங்குதளத்திற்கு ஏற்ற வகையில் மாற்றக்கூடிய மெட்ரோ ஸ்டைல் பயன்பாட்டும் உருவாக்கப்பட்டுள்ளது. விண்டோஸின் இந்தப் புதிய இயங்குதளத்திற்கேற்ற பயன்பாடுகளை உருவாக்க டெவலப்பர்களுக்கு உதவும் வகையில், சமீபத்தில் பில்ட்(Build) எனும் கருத்தரங்கை மைக்ரோசாஃப்ட் நடத்தியது.
விண்டோஸ் 8 இயங்குதளத்தின் கவனிக்கத்தக்க சிறப்பம்சங்கள்:
• தொடுதிரை டெஸ்க்டாப்புகளுக்கு புதிய தொடக்கப் பக்கம்
• எக்ஸ்புளோரர் அம்சத்தில் ரிப்பன் பயனர் இடைமுகம்
• கோப்புகளை நகலெடுக்க அல்லது நகர்த்துவதற்கு புதிய பயனர் இடைமுகம்
விண்டோஸ் இயங்குதளமும் அதன் வரலாறும் - ஒரு பார்வை
1985 ஆம் ஆண்டு விண்டோஸ் 1.0 எனும் தனது முதல் இயங்குதளத்தை அறிமுகப்படுத்திய மைக்ரோசாஃப்ட், பல மைல்கல்களை எட்டி, அடுத்து வரவிருக்கும் விண்டோஸ் 8 இயங்குதளம் வரை, பயனர் அனுபவத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்கி இன்று வரை கணினி இயங்குதளம் மற்றும் பயன்பாட்டு உருவாக்கத்தில் தனக்கென ஒரு தனி முத்திரை பதித்து வருகிறது. இதோ உங்களுக்காக விண்டோஸ் இயங்கு தளத்தின் ஒரு சிறு வரலாற்று மைல்கற்கள்:
விண்டோஸ் 1.0 - 1985
விண்டோஸ் 2.0 - 1987
விண்டோஸ் 3.0 - 1990
விண்டோஸ் 3.1 - 1992
விண்டோஸ் 3.11 - 1993
விண்டோஸ் 95 - 1995
விண்டோஸ் 98 - 1998
விண்டோஸ் 2000 - 2000
விண்டோஸ் எக்ஸ்.பி. - 2001
விண்டோஸ் விஸ்டா - 2006
விண்டோஸ் 7 - 2009