விண்டோஸ் லைவ் எசென்ஷியல்ஸ் 2011
புகைப்படங்கள், மூவிக்கள், உடனடி செய்திச் சேவை (இன்ஸ்டன்ட் மெசேஜிங்), மின்னஞ்சல், சமூகக் கூட்டிணைப்பு (சோஷியல் நெட்வொர்க்கிங்) சேவை போன்ற மைக்ரோசாஃப்ட்டின் இலவச நிரல்களை ஒன்றிணைத்து "விண்டோஸ் லைவ் எசென்ஷியல்ஸ்" எனும் தொகுப்புப் பயன்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது மைக்ரோசாஃப்ட். இதன் மூலம் புகைப்படங்கள் மற்றும் மூவிக்களை பகிர்தல், செய்தி மற்றும் மின்னஞ்சல் அனுப்புதல் போன்ற பணிகளை முன்பை விட மிக எளிமையாகவும், விரைவாகவும் செய்து முடிக்கலாம்.
எசென்ஷியல்ஸ் நிரலின் இந்த புதிய பதிப்பை விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் விஸ்டா இயங்கு தளங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும்.
விண்டோஸ் லைவ் எசென்ஷியல்ஸ் 2011 நிரல் சேவைகளின் முக்கியமான சில அம்சங்கள்:
மெசெஞ்சர்
உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர், சக பணியாளர்கள் மற்றும் பிற தொடர்புகளுடன் எந்த நேரத்திலும் உங்கள் கணினி, மொபைல், அல்லது இணையத்தின் வழியாகச் செயல்படும் மெசெஞ்சர் பயன்பாட்டின் மூலம் எப்போதும் தொடர்பிலேயே இருக்கலாம். அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களைப் பகிர்தல், உங்கள் நண்பர்களிடமிருந்து மிகச் சமீபத்திய நிகழ்வுகளை புதுப்பித்தல்களாக பெறுதல், வீடியோ வழி அரட்டை, வீடியோ செய்தி அனுப்புதல் போன்ற வசதிகளும் இதில் உள்ளன.
ஃபோட்டோ கேலரி
உங்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஆல்பங்களாக ஒழுங்கமைக்கவும், அவற்றை எடிட் செய்யவும், அவற்றை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் மிகச் சிறந்த கருவி. பிரம்மிப்பூட்டும் மூவிக்கள், படக்காட்சிகளை உருவாக்கி அவற்றை ஃபேஸ்புக், ஃபிளிக்கர் போன்ற வலைத்தளங்களில் நேரடியாக வெளியிடும் வசதியும் இதில் உண்டு.
மூவி மேக்கர்
உங்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எளிமையாகப் பகிரும் வகையில் ஒலி/ஒளி காட்சி மாற்றங்களுடன் தலைப்புகள் வழங்கி அருமையான மூவிக்களாக மாற்றலாம். நீங்கள் உருவாக்கிய மூவிக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இணையம், தொலைக்காட்சி, கணினி, மொபைல் சாதனம் அல்லது டிவிடி போன்ற அனைத்து வழிகளிலும் மிக எளிமையாகப் பகிர்ந்து கொள்ளலாம்.
விண்டோஸ் லைவ் மெஷ்
உங்கள் புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களை கணினியிலும், ஸ்கைடிரைவிலும் (SkyDrive) எப்போதும் ஒத்திசைத்து வைக்கலாம். உங்கள் கணினியில் உள்ள அனைத்து கோப்புகள் மற்றும் நிரல்களை தொலைநிலையில் அணுகும் வசதியும் இந்தப் பயன்பாட்டில் உள்ளது. முக்கியமான ஆவணங்கள் அல்லது கோப்புகளை இனி எப்போதும் உங்களோடு எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவற்றை லைவ் மெஷ்ஷில் சேமித்து விட்டால் போதும், எங்கிருந்து வேண்டுமானாலும் அவற்றை அணுகலாம்.
ரைட்டர்
அழகான வலைப்பதிவுகளை உருவாக்கி, அவற்றை வேர்ட்பிரஸ், பிளாகர், லைவ்ஜர்னல் போன்ற உங்களுக்குப் பிடித்த வலைப்பதிவு சேவையில் நேரடியாக வெளியிடலாம். வலைப்பதிவுகளை வெளியிடுவதற்கு முன் அவற்றின் முன்னோட்டம் காணும் வசதியும் இந்தப் பயன்பாட்டில் உள்ளது.
ஃபேமிலி சேஃப்ட்டி
உங்கள் குழந்தைகளின் வலைப் பயன்பாடு மற்றும் கணினியில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று எப்போதும் உங்களால் கண்காணிக்க முடியாது அல்லவா? இனி அந்தக் கவலை வேண்டாம். விண்டோஸ் லைவ் ஃபேமிலி சேஃப்ட்டியின் மூலம் எந்தெந்த வலைத்தளங்கள், கேம்ஸ்கள் மற்றும் நிரல்களை உங்கள் குழந்தைகள் அணுகலாம் என்று அமைத்து விட்டால் போதும். தடை செய்யப்பட்ட அல்லது அவர்களுக்கு உகந்ததற்ற தளங்கள் அல்லது நிரல்களை அவர்களால் பார்க்கவோ அணுகவோ முடியாது. அதுமட்டுமின்றி, எந்த நேரத்தில் உங்கள் குழந்தைகள் கணினியைப் பயன்படுத்த வேண்டும் அன்று அமைக்கும் வசதியும் இதில் உள்ளது.
மெயில்
ஹாட்மெயில், ஜிமெயில், யாஹூ மெயில் போன்ற பல மின்னஞ்சல் கணக்குகளையும் இதில் சேர்த்து விட்டால் போதும். அனைத்து கணக்குகளின் மின்னஞ்சல்களையும் இந்த நிரலிலேயே பார்த்துவிடலாம். அந்தந்த கணக்குகளுக்கான நாள்காட்டி தகவல்கள், தொடர்புகள் அனைத்தையும் இங்கிருந்தே அணுகலாம்.
மெசெஞ்சர் கம்பேனியன்
விண்டோஸ் இன்டர்நெட் எக்ஸ்புளோரரைப் பயன்படுத்தி வலையில் நீங்கள் உலாவும்போது, உங்கள் நண்பர்கள் எந்த பக்கங்களை விரும்பினார்கள் என்று பார்க்கும் வசதி மெசெஞ்சர் கம்பேனியனில் உள்ளது. வலைத்தளத்தை பார்க்கும்போது குறிப்பிட்ட ஒரு பக்கத்தை குறித்துவிட்டால் போதும், அதே பக்கத்தை உங்கள் நண்பர்கள் பார்க்கும்போது அதுகுறித்த அறிவிப்பை அவர்கள் பார்க்கலாம்.
மேலே குறிப்பிட்ட அம்சங்களுடன் பிங் பார் (Bing Bar), அவுட்லுக் கனெக்டர் பேக் (Outlook Connector Pack), மைரோசாஃப்ட் சில்வர்லைட் (Microsoft Silverlight) போன்ற அம்சங்களும் விண்டோஸ் லைவ் எசென்ஷியல்ஸ் 2011 நிரலில் உள்ளடங்கியுள்ளன.