மைக்ரோசாஃப்ட் ஆன்லைன், ஷேர்பாயின்ட் ஆன்லைன், எக்ஸ்சேஞ்ச் ஆன்லைன் மற்றும் லின்க் ஆன்லைன் ஆகிய பயன்பாடுகளை ஒன்றிணைத்து ஆஃபீஸ் 365 எனும் தமது நிறுவனத்தின் வலைப் பயன்பாட்டை உலகுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது மைக்ரோசாஃப்ட் நிறுவனம். அடுத்த தலைமுறை பயன்பாட்டிற்காக உயர் தொழில்நுட்பத்தில் உருவான இந்த ஆஃபீஸ் 365 வலைப் பயன்பாட்டை ஆதரிக்கும் எந்த ஒரு சாதனத்திலிருந்தும், தமது ஆதாரங்களை ஒரு பயன்பாட்டிலிருந்து மற்ற பயன்பாட்டிற்கு, உலகெங்கிலும் உள்ள மற்ற பயனர்களுடன் எங்கிருந்து வேண்டுமானாலும், மிக எளிமையாகவும் பாதுகாப்பான முறையிலும் ஒன்றிணைந்து பணியாற்றலாம், பகிர்ந்து கொள்ளலாம். ஆஃபீஸ் 365 க்கான வரையறுக்கப்பட்ட பீட்டா பதிப்பை 13 நாடுகளில் உள்ள பகுதிகளில் வெளியிட்டுள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
வாடிக்கையாளர்களின் பல்வேறு வகையான தேவைகளை பூர்த்தி செய்யும் ஆஃபீஸ் 365 எனும் இந்த மேகக் கணிமைச் சேவையை (கிளவுட் சர்வீஸ்) உருவாக்க, உலகெங்கிலும் உள்ள நடப்பு வாடிக்கையாளர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளது மைக்ரோசாஃப்ட். முதல் வலை சார் மின்னஞ்சலில் தொடங்கி இன்றைய வணிக உற்பத்தித் திறனுக்கான ஆன்லைன் தயாரிப்பான மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் லைவ் ஸ்மால் பிசினஸ் மற்றும் Live@edu வரையிலான தயாரிப்புகளை வழங்கிய முதிர்ந்த அனுபவத்துடன் ஆஃபீஸ் 365 கட்டமைக்கப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் மக்கள் பயன்படுத்தும் மிகப் பிரபலமான வலை உலாவிகள், ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் டெஸ்க்டாப் பயன்பாடுகளில் எவ்வித சிக்கலுமின்றி இயங்குவதால், ஆஃபீஸ் 365 பயன்படுத்துவதற்கு எந்த வித புதிய யுத்திகளையும் மக்கள் கையாள வேண்டிய அவசியமில்லை.
"உற்பத்தித்திறன் என்று பார்க்கும்போது, ஆஃபீஸ் 365 அனைத்தையும் விட மிகச் சிறந்ததொரு பயன்பாடு" என்று குறிப்பிடும் ஆஃபீஸ் பிரிவின் தலைவர் குர்ட் டெல்பீனே (Kurt DelBene), "நிறுவனங்கள் தங்கள் வியாபாரத்தில் கவனம் செலுத்தினால் போதும், நாங்களும் எங்கள் கூட்டாளர்களும் சேர்ந்து அவர்களின் உற்பத்தித் திறனைப் பெருக்குவதற்கான தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துவோம்" என்று தெரிவிக்கிறார்.
சிறு வணிகத்திற்கான ஆஃபீஸ் 365 பயன்பாட்டின் மூலம், தொழில் வல்லுநர்கள் மற்றும் 25 பணியாளர்களுக்குக் குறைவாக உள்ள சிறு நிறுவனங்கள், மாதம் ஒன்றுக்கு, ஒரு பயனருக்கு, சுமார் 300 ரூபாய் (6 அமெரிக்க டாலர்கள் அல்லது 5.25 யூரோ) செலவில், ஆஃபீஸ் வலை பயன்பாடுகள், எக்ஸ்சேஞ்ச் ஆன்லைன், ஷேர்பாயின்ட் ஆன்லைன், லின்க் ஆன்லைன் மற்றும் கூடுதலாக ஒரு புற வலைத் தளத்தை பதினைந்தே நிமிடங்களில் பெறலாம்.
சிறு வணிகத்தில் அதிக தொழில்நுட்பப் பயனை ஆஃபீஸ் 365 பயன்பாட்டின் மூலம் பெறுவதே மிகச் சிறந்த வழி என்று குறிப்பிடும் ஆஃபீஸ் 365 க்கான மைக்ரோசாஃப்ட்டின் வாடிக்கையாளர் ஆலோசனைக் குழு உறுப்பினரும், அல்லோவஸ் டிசைன் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அலுவலருமான ராப் நிக்கோலஸ், "நமக்குத் தேவையான அனைத்து அம்சங்களும் இதில் அடங்கியுள்ளன, பெரு நிறுவனங்கள் வைத்திருக்கும் அம்சங்கள் மற்றும் கருவிகள் அனைத்தும் இதில் இருப்பதால் அவர்களுக்கு இணையாக முன்னேறும் வாய்ப்பு அதிகம் உள்ளது" என்று கூறுகிறார்.
மித அளவு மற்றும் பெரிய வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு அமைப்புகளுக்கான அடிப்படை மின்னஞ்சல் தீர்வுகளை மாதம் ஒன்றுக்கு, ஒரு பயனருக்கு, சுமார் 100 ரூபாய் (2 அமெரிக்க டாலர் அல்லது 1.75 யூரோ) செலவில் பெரு வர்த்தகங்களுக்கான ஆஃபீஸ் 365 வழங்குவதோடு மட்டுமல்லாமல், மைக்ரோசாஃப்ட் புரொஃபஷனல் பிளஸ் என்ற டெஸ்க்டாப் மென்பொருளைப் பெறும் வாய்ப்பையும் வழங்குகிறது. மின்னஞ்சல், வாய்ஸ்மெயில், என்ட்ர்பிரைஸ் சோஷியல் நெட்வொர்க்கிங், இன்ஸ்டன்ட் மெசேஜிங், வெப் போர்ட்டல்கள், எக்ஸ்டிராநெட்கள், வாய்ஸ்கான்ஃபிரன்ஸிங் மற்றும் வீடியோ கான்ஃபிரன்ஸிங், வெப்கான்ஃபிரன்ஸிங், 24 மணி நேர தொலைபேசி சேவை, உடனடி உரிமங்கள் மற்றும் பல அம்சங்களை உள்ளடக்கிய ஆஃபீஸ் புரொஃபஷனல் பிளஸ் மென்பொருளை மாதம் ஒன்றுக்கு, ஒரு பயனருக்கு, சுமார் 1200 ரூபாய் செலவில் (24 அமெரிக்க டாலர் அல்லது 22.75 யூரோ) நிறுவனங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
பல்லாயிரம் வாடிக்கையாளர்களையும், பல வகையான தொழிலாளர்களையும் சென்றடைவதன் மூலமும், மேலதிக வணிகத் தொழில்நுட்பத் தேவைகளை பூர்த்தி செய்வதன் மூலமும், வாடிக்கையாளர்களுக்கு பெருமளவில் பொருட்செலவைக் குறைத்து, புதிய வளர்ச்சி வாய்ப்புகளை மைக்ரோசாஃப்ட் மற்றும் அதன் கூட்டாளர்களுக்கு ஆஃபீஸ் 365 வழங்குகிறது.
உலகெங்கிலும் உள்ள 13 நாடுகளில் பல நிறுவனங்களுடன் இணைந்து ஆஃபீஸ் 365 -இன் சோதனைக் கட்டம் நடைபெற்று வருகிறது. உலகெங்கிலும் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆஃபீஸ் 365 அடுத்த ஆண்டு வெளியிடப்படுகிறது. அதுமட்டுமின்றி, அடுத்த ஆண்டு பிற்பகுதியில் மைக்ரோசாஃப்ட் டைனாமிக்ஸ் சி.ஆர்.எம். ஆன்லைன் தொகுப்பும் ஆஃபீஸ் 365 உடன் இணைக்கப்படும் என்று அந்த செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. இதன் மூலம், அனைத்து வகையான, நிறுவனங்களுக்கும் முழுமையானதொரு வணிக உற்பத்தித்திறன் அனுபவம் கிடைக்கப்பெறும்.
2011 ஆம் ஆண்டு பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்படுத்தவிருக்கும் கல்விக்கான ஆஃபீஸ் 365 எனும் பயன்பாட்டின் மூலம், தங்கள் தேவைகளுக்கு ஏற்ப பயன்பாட்டை தனிப்பயனாக்கிக் கொள்ளும் சக்திவாய்ந்த தொழில்நுட்பத்தை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி அலுவலர்கள் பெறலாம் என்றும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.