இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தன்னிகரற்ற இலக்கிய வரலாற்றுடன் நிலைத்து வாழ்ந்து வரும் தமிழ் மொழிக்கு செம்மொழி என்கிற உயர்தகுதியை 2004ஆம் ஆண்டு அரசு அறிவித்தது. இதன் மூலம் தமிழ் மொழிக்கு உலக அரங்கிலும் தேசிய அளவிலும் மிகப்பெரும் அங்கீகாரம் கிடைத்துள்ளது. செம்மொழி தகுதியை அடைந்ததன் தொடர்ச்சியாக ஜூன் 23 முதல் 27 வரை கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வெகு சிறப்பாக நடைபெற்றது.
உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் நோக்குடன் இந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்தது. இந்த ஐந்து நாள் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவுகள், கலந்தாய்வுக் கூட்டங்கள் மற்றும் ஆய்வு மன்றங்கள் போன்ற நிகழ்ச்சிகளுடன் கவியரங்கங்கள், பட்டிமன்றங்கள் மற்றும் தமிழ்க் கலாச்சாரக் கொண்டாட்டங்களும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
மாநாட்டினை இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி பிரதிபா பாட்டில் துவக்கி வைத்தார். மாநாட்டின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உரையாற்ற இலங்கை, கனடா, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, பின்லாந்து, ஐரோப்பா, ஜெர்மனி போன்ற பல உலக நாடுகளில் இருந்து தமிழ் இலக்கிய மற்றும் வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் வல்லுநர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். உலகில் இருக்கும் அனைத்து மொழிகளிலும் மிகவும் பழமையான இலக்கியங்களைக் கொண்டிருக்கும் மொழி தமிழ் மொழி என்று குடியரசுத் தலைவர் தனது வாழ்த்துரையில் குறிப்பிட்டார்.
தமிழ் மொழியின் கலாச்சாரம், கலை மற்றும் சமுதாயப் பாரம்பரியம் போன்றவற்றின் தனித்துவத்தையும், பழங்காலத் தொன்மையையும் விவரிக்கும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை ஐம்பது நாடுகளைச் சேர்ந்த மூவாயிரத்துக்கும் அதிகமான அறிஞர்கள் வெளியிட்டனர்.
அஸ்கோ பர்போலாவுக்கு கலைஞர் செம்மொழி விருது
பேராசிரியர் அஸ்கோ பர்போலாவுக்கு “கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது” குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் அவர்களால் வழங்கப்பட்டது. சிந்து சமவெளி எழுத்துகளில் நடைபெற்று வரும் ஆராய்ச்சிகளில் அஸ்கோ பர்போலா முக்கியப் பங்கு வகித்து வருகிறார். அவர் பின்லாந்தில் உள்ள ஹிலின்ஸ்கி பல்கலைக்கழகத்தில் இந்தியயியல் துறையின் தலைமைப் பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார். தனது வாழ்த்துரையில், தமிழ்நாட்டின் செழுமையான இலக்கியங்களும் அவற்றின் தொன்மையையும் உலகெங்கும் உள்ள பல்வேறு கலாச்சாரப் பாரம்பரியங்களுடன் ஒத்துப்போவதாகக் குறிப்பிட்டார்.
தமிழ் இணைய மாநாடு
தமிழ் இணைய மாநாட்டை தமிழக முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி தொடங்கி வைத்தார். தமிழியல் தொடர்பான நூல்கள் மற்றும் ஆவணங்கள் உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவை மின்னணு வடிவாக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் அத்தகைய அறிவுப் பொக்கிஷங்களை உலகல் எங்கிருந்து வேண்டுமானாலும் அணுகிப் பயனடைவதற்கான வசதிகள் செய்யப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் தன் உரையில் வலியுறுத்திக் கூறினார்.
ஐநூறு பங்கேற்பாளர்கள் பங்கு பெற்ற தமிழ் இணைய மாநாட்டில் நூற்றிப் பத்து ஆராய்ச்சிக் கட்டுரைகள் இடம்பெற்றன. மின்-நிர்வாகம், விக்கிப்பீடியா, வலைப்பதிவுகள், தேடல் பொறிகள், எழுத்துரு கண்டறிதல் மற்றும் தமிழ் இணைய களங்கள் போன்ற தலைப்புகள் மாநாட்டில் விவாதிக்கப்பட்டன. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தைச் சேர்ந்த மைக்கேல் கப்லான் மற்றும் குமரன் ஆகியோர் முறையே யூனிகோட் மற்றும் கணினி வழி மொழிபெயர்ப்பு ஆகிய தலைப்புகளில் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர். மாநாட்டைப் பற்றிய சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது. அதில் 130 கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு – கட்டுரைகள்
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட பலதரப்பட்ட கட்டுரைகள் தமிழ் மொழி ஆராய்ச்சியில் அறிஞர்கள் கொண்டிருக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்துவதாய் இருந்தது. 55 தலைப்புகளில் 913 கட்டுரைகள் வெளியிடப்பட்டன. மொத்தக் கட்டுரை எண்ணிக்கையில், 152 கட்டுரைகள் வெளிநாட்டு அறிஞர்களால் வெளியிடப்பட்டன. 840 வெளிநாட்டவர்கள் அடங்கிய 2605 சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
மாநாட்டின் முதல் நாளில் தமிழ் மொழிக்கு வழங்கப்பட்டுள்ள உலகச் செம்மொழித் தகுதி, சங்ககால கலைக்களஞ்சியங்கள், சிந்துச் சமவெளி எழுத்துக் குறியீடுகள், இலக்கணம், தனிநபர் பெயர்ச்சொற்களை மொழிபெயர்ப்பதில் உள்ள சிக்கல்கள், அகராதிகளை ஆராய்தல் போன்ற தலைப்புகளில் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
இரண்டாவது நாளில் தமிழும் இசையும், தெற்காசிய நாடுகளுடன் கலாச்சார உறவுகள், சிங்களக் கவிதைகள், ஆப்பிரிக்க அமெரிக்க இசை, தேசிய வளர்ச்சிப் பணியில் தமிழ்ப் பெண்களின் பங்களிப்பு போன்ற பல்வேறு தலைப்புகள் இடம்பெற்றன. அவற்றுள் பல தலைப்புகள் சர்வதேச மொழிகள் மற்றும் அவற்றுடன் தமிழ் மொழி கொண்டுள்ள தொடர்பு பற்றியதாக இருந்தன.
மூன்றாவது நாள் அரங்கில், பழங்கால நாணயங்கள், சோழர்கள், டச்சுக்காரர்கள் மற்றும் புத்த மதத்தவர்கள் பயன்படுத்திய செம்பு மற்றும் வெள்ளித் தகடுகள், கடல்சார் அகழ்வாராய்ச்சிக் கண்டுபிடிப்புகள் போன்ற பல்வேறு சுவாரஸ்யமான கட்டுரைகளுக்கு பெரும் வரவேற்பு காணப்பட்டது. இஸ்லாம் மற்றும் இந்துத்துவம் பற்றிய ஆன்மீகக் கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்பட்டன.
மாநாட்டின் இறுதி நாளில் மொழிபெயர்ப்பு, மீடியா போன்ற தலைப்புகளின் கீழ் வெளியிடப்பட்ட கட்டுரைகளுக்கு பலத்த உற்சாகம் அளிக்கப்பட்டது. ஆஸ்திரேலியா, மொரீஷியஸ் போன்ற நாடுகளில் தமிழின் நிலை குறித்த ஆய்வு கட்டுரைகளும் சேர்க்கப்பட்டன.
அனைத்து ஆய்வுக் கட்டுரைகளும் மல்டிமீடியா உபகரணங்களின் உதவியுடன் மிகச் சிறப்பாக விளக்கப்பட்டன.
கலாச்சார நிகழ்ச்சிகள்
ஆய்வு அரங்கங்களில் கலந்தாய்வுக் கூட்டங்கள், சொற்பொழிவுகள் மற்றும் ஆய்வுக் கட்டுரை விளக்கங்கள் போன்றவற்றால் அறிஞர்களும் ஆராய்ச்சியாளர்களும் பயனடைந்து கொண்டிருந்த சமயத்தில், தமிழ் கலாச்சாரம் மற்றும் இலக்கியங்களின் தனித்துவமிக்க சிறப்பை விளக்கும் கலாச்சார நிகழ்ச்சிகள் பொது மக்களை தன்வசம் ஈர்ப்பதாய் அமைந்திருந்தன. தமிழ் கலாச்சார அம்சங்களை பொழுதுபோக்குப் பாங்குடன் விளக்கும் நிகழ்ச்சிகள் லட்சக்கணக்கான மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தின. மாநாட்டின் எல்லா நாட்களிலும் மாநாட்டுப் பந்தலின் மாலைநேரப் பொழுதுகள் மனதை ஈர்க்கக்கூடிய கலாச்சார நிகழ்ச்சிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
கண்காட்சி
கண்காட்சி அரங்குகளில் தமிழின் அரும்பெரும் கலாச்சார வரலாறு, பாரம்பரியம் மற்றும் இலக்கியங்களை விளக்கும் எழுநூறுக்கும் அதிகமான கலைக் களஞ்சியங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. அவற்றை மக்கள் நீண்ட வரிசையில் நின்று கண்டுகளித்துச் சென்றனர். மொழி கணினியியலை மையமாகக் கொண்ட ஒரு கண்காட்சியகமும் அமைக்கப்பட்டிருந்தது. கடைசி நான்கு நாட்களில் 1.7 லட்சம் மக்கள் கண்காட்சியைப் பார்வையிட்டனர். இணையக் கண்காட்சியை ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பார்வையிட்டனர்.
முக்கியத் தீர்மானங்கள்
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறும் என்பதை தமிழக முதல்வர் மு. கருணாநிதி அறிவித்தார். தமிழ் மொழி மற்றும் தமிழ் கணினியியலின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் வழிவகுக்கும் பல திட்டங்களை அரசு திட்டமிட்டு வருகிறது. இந்தியா மற்றும் அயல்நாடுகளின் பல்வேறு கலாச்சாரங்களுக்கு தமிழ் மொழியின் ரசணையை எடுத்துச் செல்லும் முயற்சிகள் எடுக்கப்படவுள்ளன.
நடைமுறையில் உள்ள 8-பிட் குறியாக்கக் கணினிகள் அனைத்தையும் 16-பிட் குறியாக்கக் கணினிகளாக மாற்ற அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவுள்ளது. தமிழ் மொழிப் பயன்பாட்டு உதவி தேவைப்படும் அனைத்துக் கணினிப் பயன்பாடுகளிலும் யூனிகோட் முறை பிரதானக் குறியீட்டு முறையாக அமைக்கப்படும்.
மேலும் ஒரு இனிய செய்தியாக, தமிழ் மொழி பொறிக்கப்பட்ட அஞ்சல் தலை ஒன்று வெளியிடப்பட உள்ளது. ஒரு மொழிக்காக சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்படுவது இந்திய வரலாற்றிலேயே இதுவே முதன்முறையாகும்.
இந்த மாநாட்டுச் சுருக்கவுரையை மாநாட்டில் வெளியிடப்பட்ட இரண்டு மலர்களைக் குறிப்பிடாமல் நிறைவு செய்ய முடியாது. இரண்டு மாநாட்டு மலர்களில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் இடம்பெற்ற 129 கட்டுரைகள் மற்றும் 34 கவிதைகளும், தமிழ் இணைய மாநாட்டின் 130 கட்டுரைகளும் பிரசுரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டன. அது மொழி ஆர்வலர்களை மகிழ்ச்சியூட்டுவதாகவும் உற்சாகப்படுத்துவதாகவும் அமைந்திருந்தது.