விண்டோஸ் மீடியா சென்ட்டர்
விண்டோஸ் விஸ்டா ஹோம் பிரீமியம் அல்லது அல்டிமேட் பதிப்பு பயன்படுத்தினால், ‘மீடியா சென்டர்’ (Media Centre) என்ற சிறப்பு வசதியைப் பற்றித் தெரிந்திருக்கலாம். இந்த எளிமையான மெனு சிஸ்டத்தைப் பயன்படுத்தி கணினியில் சேமிக்கப்பட்டுள்ள பல்வேறு வகையான டிஜிட்டல் மீடியாக்களை நிர்வாகிக்கலாம். வீடியோ ஃபைல்களை, டிவிடிகளை பார்வையிடவும் இதைப் பயன்படுத்தலாம். வீட்டில் உள்ள மற்றொரு கணினிக்கு மீடியா ஃபைல்கள் ஸ்ட்ரீம் செய்யவும் பயன்படுத்தலாம். அதாவது மீடியா சென்டர் பிசி பயன்படுத்தினால், அந்த கணினி வீட்டின் டிஜிட்டல் மையமாகச் செயல்படும். ஆனால் விண்டோஸ் எக்ஸ்பீ பயன்படுத்தினால் என்ன செய்வது? மீடியா சென்டர் போன்ற வசதிகளை எக்ஸ்பீயில் கொண்டு வரும் இலவச புரோகிராம்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
www.team-mediaportal.com தளத்திற்குச் சென்று, Quick links பகுதியில் Download Media Portal என்பதை கிளிக் செய்யுங்கள். புதிய வெளியீட்டைத் தேர்வு செய்து டவுன்லோட் கிளிக் செய்யுங்கள். ஃபைலை டெஸ்க்டாப்பில் சேமித்துக்கொள்ளுங்கள்.
பதிவிறக்கிய பிறகு நிறுவும் பொருட்டு அந்த ஃபைல் மீது இரட்டை கிளிக் செய்யுங்கள். இந்த நிலையிலும் இணைய இணைப்பில் இருக்க வேண்டும். ஆங்கில மொழியைத் தேர்வு செய்து நெக்ஸ்ட் கிளிக் செய்யுங்கள். Start with Installation now என்ற ஆப்ஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திக்கொண்டு நெக்ஸ்ட் கிளிக் செய்யுங்கள்.
நிறுவும் செயல்முறையின் முதல் பகுதி, மீடியா போர்ட்டல் மூலமாக டி.வி. பார்க்கப் போகிறீர்களா எனக் கேட்கும். கணினியில் டிவி டியூனர் கார்டு நிறுவப்பட்டிருந்தால் தேர்வு செய்து தொடருங்கள்.
புரோகிராமிற்குத் தேவையான காம்போனென்ட்டுகள் பதிவிறக்கி நிறுவப்படுவதற்கு காத்திருக்க வேண்டும். நிறுவும் செயல் முறையின் முடிவில் Exit கிளிக் செய்யுங்கள். இப்பொழுது கணினியில் மீடியா போர்ட்டல் நிறுவப்பட்டுவிட்டது. அதை கான்ஃபிகர் செய்ய வேண்டும். அப்பொழுதுதான், கணினியில் உள்ள மீடியா அதன் மெனுவில் காட்டப்படும்.
Start=>All Programs=>Team Media Portal தேர்வு செய்யுங்கள். Media Portal மீது கிளிக் செய்து, Media Portal Configuration என்பதைத் தேர்வு செய்யுங்கள். கான்ஃபிக்ரேஷனை Normal Mode-ல் விட்டுவிடுங்கள். Continue கிளிக் செய்யுங்கள்.
முதலில் வீடியோஸ் சென்று, Video Folder தேர்வு செய்யுங்கள். உங்களது வீடியோக்கள் இருக்கும் ஃபோல்டர் காட்டப்படுகிறதா? என்று பார்த்துக் கொள்ளுங்கள். இல்லை எனில் Add கிளிக் செய்யுங்கள்.
நீங்கள் கான்ஃபிகர் செய்யக்கூடிய மற்றொரு வகை Weather. இது மீடியா போர்ட்டலில் அன்றாட பருவநிலை நிலவரத்தைத் தெரிவிக்கும். Add என்பதை கிளிக் செய்து, உங்களது புவியியல் பகுதியைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்.
மவுஸ் கர்சர் அல்லது அம்புக்குறி கீகளை பயன்படுத்தி, மெனு ஐட்டங்களுக்கு இடையில் மாற்றிக் கொள்ளலாம். ஒரு ஐட்டத்தை தேர்வு செய்ய, மவுஸ் கிளிக் செய்யலாம் அல்லது என்டரை அழுத்தலாம். சான்றாக Music சென்று, ஒட்டுமொத்த எம்பி3 திரட்டையும் பார்க்கலாம். பாடல்களைத் தேர்வு செய்து இயக்கிக் கேட்கலாம்.
ஒளிப்படத் தொகுப்புகளுக்கும் இது பொருந்தும். படங்களை பார்வையிடவும், ஸ்லைடுஷோ உருவாக்கவும் My Pictures தேர்வு செய்யுங்கள். இனி மீடியா போர்ட்டலில் உள்ள வசதிகளைப் பார்வையிடுங்கள். கணினியில் சேமிக்கப்பட்டுள்ள மீடியாக்களை (பாடல், இசை, ஒளிப்படம், வீடியோ) பொறுத்தே இந்த புரோகிராமை சிறப்பாக பயன்படுத்த முடியும். கணினியில் டிவி அவுட் (TV out) இணைப்பு இருந்தால், கணினியை டிவியுடன் இணைக்க இந்த புரோகிராமை பயன்படுத்தலாம்.